நாகர்கோவில்: வரும் சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் சீட் இல்லை என கூறப்படுகிறது. டெல்லி வரை சென்றும், அவர் முக்கிய தலைவர்களை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளார். குமரி மாவட்ட பா.ஜ.வில் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி (80). 1951ல் பாரதிய ஜன சங்கம் தொடங்கப்பட்ட போதே அதன் தொடக்க கால உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். 1980 கால கட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியாக மாறிய பின், அந்த கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் களம் கண்டவர் எம்.ஆர்.காந்தி. இன்னும் குமரி மாவட்டம் மட்டுமின்றி, பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொறுப்பாளர்களால் கூட அண்ணாச்சி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர்.
கடந்த 2013ல் நாகர்கோவில் சற்குணவீதியில் இருந்து வாக்கிங் சென்று கொண்டிருந்த எம்.ஆர்.காந்தியை கொல்ல முயற்சி நடந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றதால் அன்றைய தினம் மாவட்டமே ஸ்தம்பித்து போனது. ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் எம்.ஆர்.காந்தி இருந்துள்ளார்.
1980 ல் ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில், 1984ல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் 2006ல் குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பின்னர் 2011ல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்பை இழந்தார். 2016 ல் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2021 ல் மீண்டும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது வெற்றியால் பாரதிய ஜனதாவினர் மட்டுமல்ல, மாவட்ட மக்களும் திருப்தி அடைந்தனர். அதிக மதிப்பு மிக்க தலைவராக விளங்கி வரும் எம்.ஆர்.காந்தியின் செயல்பாடுகள், அவர் எம்.எல்.ஏ. ஆன பின் அவரது கட்சியினரால் கூட ரசிக்கப்பட வில்லை. அவரை சுற்றி இருப்பவர்கள் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வை ஒரு தலைபட்சமாக இயக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எம்.எல்.ஏ. பொறுப்புக்கு வந்த எம்.ஆர்.காந்தி ஒருமுறை கூட அந்த தொகுதி சட்டமன்ற அலுவலகத்துக்கு சென்றதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்ற கட்சி அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.
சமீபத்தில் தான் இசேவை மையம் திறப்புக்காக அந்த கட்சி அலுவலகத்தின் வாசல் வரை சென்றவர் பின்னர் அங்கிருந்து அப்படியே திரும்பினார். தொகுதி மக்கள் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் இன்னும் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. மீதான மதிப்பு அந்த கட்சியினரிடம் மட்டுமல்ல, பிற கட்சி தலைவர்கள், தொண்டர்களிடம் உள்ளது. குமரி மாவட்ட அரசியல் கட்சிகளில் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்ளார். இந்த முறையும் சட்டமன்ற தேர்தலில் சீட் பெறுவதற்கான முயற்சிகளில் அவ்ர இறங்கி இருக்கிறார். ஆனால் கட்சி மேலிடம், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வுக்கு ஓய்வு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கவுரமான எம்.எல்.ஏ. பதவி என்ற வெற்றியுடன், அவர் ஓய்வு பெறுவதையே கட்சியின் அகில இந்திய தலைவர்கள் விரும்புகிறார்கள். எனவே இந்த முறை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு வேறு வேட்பாளர் தேடுகிறார்கள். குறிப்பாக பெண் வேட்பாளராக இருக்கலாம் என் பேச்சுகள் பரவலாக அடிபடுகிறது. சமீபத்தில் டெல்லிக்கு சென்ற எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க முடியாமல் திரும்பினார்.
கட்டி அணைக்கும் பிரதமர்
பிரதமர் மோடி குமரி மாவட்டம் வரும் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. இடம் பெற்று இருப்பார். எப்போது வந்தாலும் எம்.ஆர்.காந்தியை பார்த்ததும் முக மலர்ச்சியுடன் கட்டி பிடித்து அரவணைத்து செல்வது பிரதமர் மோடியின் வழக்கம் ஆகும். குமரி மாவட்டம் என்றாலே எம்.ஆர்.காந்தி தான், பிரதமருக்கு நினைவுக்கு வருவார் என பாரதிய ஜனதாவினர் பெருமையுடன் கூறுகிறார்கள்.
