×

கள்ளசந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்பனை: சென்னையில் டீ, காபி விலையை திடீரென உயர்த்திய உரிமையாளர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: கள்ளசந்தையில் ஒரு காஸ் சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதால், சென்னையில் டீ, காபி விலையை கடை உரிமையாளர்கள் உயர்த்திவிட்டனர். இந்த திடீர் விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது இதுவரை ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு டீ, தற்போது ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்ட காபி, ரூ.25க்கு விற்பனை செய்யப்படுவதாக சாமானிய மக்கள் புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை வழித்தடத்தை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனை மீறி ஹார்முஸ் நீரிணை வழித்தடத்தில் எந்த சரக்கு கப்பல் வந்தாலும், தாக்குதல் நடத்துவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் கச்சா எண்ணெய் விநியோகம் மட்டுமல்லாமல் சிலிண்டர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 60 சதவீத எரிவாயு சவுதி அரேபியாவை நம்பியே இருக்கிறது. தற்போது விநியோகம் தடைப்பட்டுள்ளதால், இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்ைப ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக சிலிண்டர் பாதிப்பு என தொடங்கி தற்போது வீட்டு சிலிண்டர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் வீடுகளில் சமைப்பதில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் காலி சிலிண்டர்களுடன் பலர் ஏஜென்சிகளை முற்றுகையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

வர்த்தக சிலிண்டர் கிடைக்காத காரணத்தால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அப்படியே சில ஓட்டல்கள் செயல்பட்டாலும் அதில் உற்பத்தி செய்யும் உணவு மெனுவை குறைத்துள்ளது. அதாவது, இட்லி, தோசை, சப்பாத்தி மட்டுமே கிடைக்கிறது. பிரியாணி, கிரில் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், ‘‘ காஸ் சிலிண்டர் தற்போது கிடைப்பதில்லை. இதே நிலமை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் 1 லட்சம் உணவகங்கள் மூடும் அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் பணியாற்றும் இளைஞர்கள் பலரும் சாப்பாடு கிடைக்காமல் பெரும் சிக்கலை சந்திக்க தொடங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் ஓட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றன.

இந்த பரபரப்புகளுக்கு இடையே, சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எந்த ஒரு வேலை செய்தாலும் களைப்பு வராமல் மனித உடலை உற்சாகத்துடன் வைத்திருப்பதில் டீ, காபிக்கு முக்கிய பங்குண்டு, அந்த வகையில் டீ கடைகளுக்கு எப்போதுமே ஒரு மவுசு உண்டு.
இந்த நிலையில், வர்த்தக சிலிண்டர் பாதிப்பு டீ கடைகளையும் விட்டு வைக்கவில்லை. ஸ்டாக் வைத்திருந்தவர்கள் போண்டா, வடை போட்டு வந்தனர். நேற்று முதல் அதை நிறுத்தி விட்டனர். என்ன என்று கேட்டால் சிலிண்டர் வந்தால் தான் இனி போண்டா என்று கூறுகின்றனர். அடுத்ததாக, சிலிண்டர் வந்தால் மட்டுமே டீ, காபி போட முடியும் என்ற குண்டை தூக்கி போட்டனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் டீ கடைகளில் ஒரு டீ ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் காபி ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று காலை சென்னையில் பெரும்பாலான கடைகளில் டீ ரூ.20, காபி ரூ.25 என விற்பனை செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலையை டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டீ கடை உரிமையாளர்களிடம் கேட்ட போது, ‘‘காஸ் சிலிண்டர் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இருக்கிற ஒரு சிலிண்டரை வைத்து தான் நாள் முழுவதும் ஓட்ட வேண்டும். தற்போது வடை, போண்டா போடுவதை நிறுத்தி விட்டோம், டீ, காபி மட்டும் தான் கொடுக்கிறோம். அதற்காக ஒரு சிலிண்டரை கள்ளச் சந்தையில் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் கொடுத்து புரோக்கர்கள் மூலம் ஏஜென்சிகளிடம் இருந்து வாங்குகிறோம். அதனால் தான் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்கள். காஸ் சிலிண்டரை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுத்தால் மட்டுமே இதுபோன்ற விலை உயர்வை தடுக்க முடியும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால்...