×

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் ஓபிசி மக்களின் நீதிக்கான பல்லாண்டு போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: ஓபிசி கிரீமிலேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிப்பதாவது: ஓபிசி மக்களின் நீதிக்கான பல்லாண்டுப் போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி. ஓபிசி கிரீமி லேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இத்தீர்ப்பானது, கிரீமிலேயர் நிர்ணயத்தின்போது ஊதிய வருமானத்தையும் தொழில் அல்லது சொத்து மூலமாக ஈட்டும் வருமானத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது எனக் கூறியுள்ளது- ஓபிசி மக்களின் நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதில் இருந்து பாதுகாக்கிறது – குடிமைப் பணித் தேர்வுகளுக்கான தகுதி வரையறை தொடர்பான உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உறுதிசெய்துள்ளது.

பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்புகளில் ஓபிசி மக்களுக்கு எதிராக இருந்த பாகுபாட்டை நிராகரித்திருக்கிறது, இட ஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது எனும் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. எனினும், இந்த வழக்கில் உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினர் பலரின் நியாயமான உரிமையை மறுக்கும் நிலைப்பாட்டை அரசு எடுத்து வாதாடியது. அது மட்டுமில்லாமல், முன்னேறிய வகுப்பினருக்கான பொருளாதார ரீதியான EWS இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையாக அரசியலமைப்புச் சட்டம் வகுத்து தந்த வரையறையை மீறியது. மண்டல் குழு அடிப்படையிலான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து முப்பது ஆண்டுகளாகியும், நாட்டின் பல முன்னணி உயர்கல்வி நிறுவனங்களிலும் ஒன்றிய அரசுப் பணிகளிலும் பல ஓபிசி பணியிடங்கள் இன்றும் நிரப்பப்படாமலே உள்ளன.

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பில் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தது உள்ளிட்ட பலவற்றிலும் திமுக சமூகநீதிக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. சமூகநீதிக்கான நம் போராட்டம் தொடரும். ஏற்கனவே குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் தங்களுக்கான இடங்கள் மறுக்கப்பட்ட ஓபிசி தேர்வாளர்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,OBC ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,OBC… ,
× RELATED தே.ஜ. கட்சிகள் 17ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு