×

எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த மக்கள்: 21 நாட்கள் கையிருப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் சங்கம் தகவல்

* முன்னெச்சரிக்கையாக ஃபுல் டாங்க் நிரப்பினர்
* வாட்டர் கேன், பெரிய பாட்டில்களில் வாங்கி சென்றனர்

சென்னை: வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெட்ரோல் பங்க்கிற்கு கார், மோட்டார் சைக்களில் படையெடுத்த வாகன ஓட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. முன்எச்சரிக்கையாக பெட்ரோல், டீசலை பெரிய கேன், பாட்டில்களில் வாகன ஓட்டிகள் வாங்கி சென்றனர். ஆனால் 21 நாட்கள் 7 ஆயிரம் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் கையிருப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்தார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போர் தொடுத்துள்ளன.

ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானும் தனது தாக்குதலை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த பிப்ரவரி 28ம் தேதியில் இருந்து தொடர்ந்து கடுமையாக தாக்குதல் நடந்து வருகிறது. ஈரான், தனது நாட்டை சுற்றியுள்ள சவூதிஅரேபியா, ஈராக், ஐக்கிய அரசு அமீரகம், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ ஏவுதளங்கள், முகாம்கள் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், உலக நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் லோடுகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்துள்ளனர்.

ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா கடலில் எண்ணெய் கப்பல்கள் தேங்கி நிற்கின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் வரமுடியாமல், ஓமன் வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குவைத், கத்தார், சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு உற்பத்திக்கான திரவ சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டுள்ளது. அதன் இருப்பும் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை பெரும்பாலான எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்தியுள்ளன. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களுக்கான வர்த்தக சிலிண்டர் விநியோகம் என்பது கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்பட்டது. இதனால், சிறிய டீக்கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பல ஓட்டல்களில் கையிருப்பில் இருந்த சிலிண்டர்களை பயன்படுத்தி கடந்த 2 நாட்களாக உணவு பொருட்களை தயாரித்து வழங்கின. மேலும் வழக்கமாக தயாரித்து வழங்கப்படும் உணவு பொருட்கள் நிறுத்தப்பட்டது. எந்த உணவு எளிதாக செய்ய முடியுமோ? அந்த உணவுகள் மட்டும் தயாரித்து வழங்கப்படுகிறது. மதியம் சாப்பாட்டிற்கு ஒரு சாம்பார், ஒரு கூட்டு என்ற அளவில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்றும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன.

மேலும் உணவகங்கள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. பல உணவகங்கள் சிலிண்டர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. சிறிய டீக்கடைகளில் வெறும் டீ மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. வடை, பச்சி, சமோசா, போண்டா உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நிலைமையை சமாளிக்க பல உணவகங்களில் விறகு மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். அதுவும் பெரிய ஓட்டல்களில் விறகு அடுப்புக்கான வசதி இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நேற்று முதல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயரப்போவதாகவும், தட்டுப்பாடு ஏற்பட இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியது.

இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் நிலையங்களில் குவிய தொடங்கினர். இதே நிலை தான் தமிழகம் முழுவதும் காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை எழும்பூர், சென்ட்ரல், மயிலாப்பூர், ராயப்பேட்டை, அண்ணாநகர், அமைந்தகரை, எழும்பூர், அம்பத்தூர், ஆவடி, வில்லிவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக ஏராளமானோர் வரிசையில் நின்றதை காண முடிந்தது. முன்எச்சரிக்கையாக பெரிய தண்ணீர் கேன், பாட்டில்களில் வாங்கிச் சென்றதையும் பார்க்க முடிந்தது. விடிய, விடிய கூட்டம் இருந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.முரளி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.பி.முரளி அளித்த பேட்டி: எனக்கு கிடைத்த தகவல்படி தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் 21 நாட்களுக்கு ஸ்டாக் உள்ளது. அதற்கு முன்னதாக பெட்ரோல், டீசல் வந்து விடும் என்று பெட்ரோலியம் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தேவையான பெட்ரோல், டீசலை மட்டும் பொதுமக்கள் வாங்கவும். கிடைக்காது என்று 50 லிட்டர் பெட்ரோலோ அல்லது 100 லிட்டர், 200 லிட்டர் என்று டீசலை வாங்கி கொண்டு போய் வீடுகளிலோ, அலுவலகத்திலோ வைப்பது தேவையில்லாதது. இது மாதிரி செய்வதால் தான் டிமாண்ட் ஏற்படுகிறது. இது தேவையை இல்லை. நீங்கள் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லலாம்.

வழியில் எந்த பங்க்குகளில் நுழைந்தாலும் உங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடைக்கும். 7 ஆயிரம் பெட்ரோல் பங்குகள் உள்ளது. 10 வருடத்திற்கு முன்னர் 4 ஆயிரம் பெட்ரோல் பங்குகள் தான் இருந்தது. அதனால், நீங்கள் பெட்ரோல் பங்க்கை தேடி போக வேண்டிய அவசியமே இல்லை. எல்பிஜிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு வரும் என்று பெட்ரோல் பங்கை நோக்கி செல்கிறார்கள். நார்மலா பெட்ரோல் பங்க்கில் ஒரு நாளைக்கு என்ன விற்பனை ஆகுமோ? அதை விட அடுத்த ஒரு அரை மடங்கு அதிகமாகி கொண்டே இருக்கிறது. சில இடங்களில் இரட்டிப்பு விற்பனை நடக்கிறது. அது தேவையை இல்லாதது. நெருக்கடியான சூழ்நிலையில் மற்ற நாடுகளில் விலையை உயர்த்தி இருக்கிறார்கள். நமது நாட்டில் விலையை அவ்வளவு சீக்கிரத்தில் உயர்த்த போவது இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. பங்க்குகளுக்கு போனால் எல்லாருக்குமே பெட்ரோல், டீசல் கிடைக்கும். நீங்களே செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். உங்களை பார்த்து விட்டு மற்றவர்களும் அதை செய்கிறார்கள். சாதாரணமாக ஒருவர் ரூ.100க்கு பெட்ரோல் போடுபவர், ரூ.400க்கு பெட்ரோல் போடுகிறார். 10 லிட்டர் பெட்ரோல் போடுபவர், டேங்க் புல் பண்ணுகிறார். டீசல் போடுவர்களும் டேங்க் புல் பண்ணுகிறார்கள். தேவைக்கு மீறி அவர்கள் பெட்ரோல், டீசலை வாங்குகிறார்கள். கிடைக்காம போய் விடுமோ? என்று. மத்திய அரசு சொல்லியிருக்கிறது 90 நாட்களுக்கு ஸ்டாக் இருக்கிறது என்று. தமிழ்நாட்டை பொறுத்தவரை 7000 பெட்ரோல் பங்க் சப்ளை செய்வதற்காக 14 டெர்மினல் தமிழ்நாட்டில் இருக்கிறது. சென்னையில் ஆரம்பித்து திருநெல்வேலி வரை இருக்கிறது.

இந்த டெர்மினலில் எனக்கு கிடைத்த தகவலின்படி 21 நாட்களுக்கு அவர்களிடம் பெட்ரோல், டீசல் ஸ்டாக் உள்ளது. இதை சென்னையில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 21 நாட்களுக்கு முன்னதாகவே நமக்கான பெட்ரோல், டீசல் ஸ்டாக் வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, பொதுமக்கள் வழக்கமான நடைமுறையில் இருந்து பெட்ரோல், டீசலை வாங்குமாறு கேட்டு கொள்கிறோம். ஜெனரேட்டர் மற்றும் அத்தியாவசிய தேவைக்கு, அதாவது ஆஸ்பத்திரி போன்றவற்றிருக்கு தேவையான அளவுக்கு கேனில் டீசல் வாங்கினால் போதும்.இவ்வாறு அவர் கூறினார். தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வதந்தியால் மக்கள் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கி வருவதால் இதற்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

* மக்கள் அச்சப்பட வேண்டாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: மேற்காசிய போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, மூன்று நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு – பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமருக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டமும் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மேலும் தீவிரமாக கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நேரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு துணை நின்று மேற்காசிய போர்ச்சூழலை எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED மார்ச் 15ம் தேதிக்குள்...