×

பாஜ கட்டுப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி: என்டிஏவுக்கும் தமிழகத்துக்கும் இடையில் தான் போட்டி; திமுக போஸ்டர்களால் பரபரப்பு

தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் அனல் பறக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டிகள் நிலவியுள்ளன. திமுக கூட்டணியை பொறுத்தவரை வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்தியுள்ளது. அசுர பலத்தில் களம் இறங்கியுள்ள திமுக கூட்டணியை எதிர்த்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி களம் இறங்கியுள்ளது. கூட்டணி முடிவானதில் இருந்து இக்கூட்டணியில் பாஜ தலைமைக்கும், அதிமுக தலைமைக்கும் இடையே வார்த்தை போர் முற்றியது.

என்டிஏ கூட்டணிக்கு யார் தலைமை என்ற குழப்பம் நிலவியது. அதை தொடர்ந்து, கூட்டணி ஆட்சி தான் என்று பிரதமர் மோடி, அமித்ஷாவும் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், கூட்டணி ஆட்சி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறிவந்தார். இதனால் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், அதிமுக மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுக தலைமையிலான கூட்டணிக்கும் தான் போட்டி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

ஆனால் திமுகவை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கும் டெல்லி பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையில் தான் போட்டி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
மேலும் பிரதமர் மோடியும் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று பேசி வருகிறார். இது அதிமுகவினர் மத்தியில் தர்மசங்கடமான நிலையை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தனிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் பாஜவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடி நேற்று திருச்சி வந்தார். கடந்த இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்த போது, அதிமுக மீது விமர்சனங்களை கூறி வந்த திமுகவினர் இந்த முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சை மையமாக வைத்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்களை திமுகவினர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் என்டிஏவுக்கும், தமிழகத்துக்கும் இடையில் தான் போட்டி என குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவின் இந்த போஸ்டர்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சிலிண்டர்களை பதுக்கி தட்டுப்பாட்டை உருவாக்கும் ஒன்றிய அரசு: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு; இந்தியா முழுவதும் நயினார் தருவாரா என கேள்வி
சபாநாயகர் அப்பாவு நேற்று நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படத் துவங்கியுள்ளது. கடந்த 4 தினங்களுக்கு முன்னர் தான் ஒன்றிய அரசு எரிவாயு, டீசல், பெட்ரோல் மேலும் ஒரு மாதத்திற்கு இருப்பு இருக்கிறது என தெரிவித்தது. அது இப்போது எங்கே போனது என தெரியவில்லை. ஒன்றிய அரசுதான் பதுக்கி வைத்து தட்டுப்பாடு உருவாக்கியுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரே நாள் இரவில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னவர் தான் நம் பிரதமர். அதேபோல் இப்போது திடீரென எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எரிவாயு தட்டுப்பாடு இல்லை, தேவைப்படுவர்களுக்கு நான் தருவேன் எனக் கூறும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க சிலிண்டர்களை தருவாரா மக்கள் 100 சதவீதம் திமுக ஆட்சிக்கும், திட்டங்களுக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். திமுக கூட்டணி 53 சதவீதம் வாக்கு பெறுவது உறுதி. மீண்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 2.0 ஆட்சி வரும்.

Tags : Edappadi Palaniswami ,BJP ,NDA ,Tamil ,Nadu ,DMK ,Legislative Assembly ,Tamil Nadu ,AIADMK ,Thaveka ,Naam Tamilar.… ,
× RELATED 49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கை;...