×

49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கை; பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: நாம் தமிழர் கட்சி வெளியிட்டது

சென்னை: பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்பட 49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சி நேற்று சென்னையில் வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஏற்கனவே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் சீமான் நேற்று 49 தலைப்புகளில் 462 பக்கத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

  • தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும்.
  • நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிகளில் பெண்களுக்கு தனித் தொகுதிகள் பெற நடவடிக்கை.
  • மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி என மாற்ற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
  • நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும்.
  •  படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்.
  • மாணவர்களின் கல்விக் கடன்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
  • நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையை தனிப்படைகளை அமைத்து முற்றுமுழுதாக தடுக்கும்.
  • வேதிப்பொருட்களாலான உரங்களைக் கொண்டு செய்யப்படும் வேளாண்மையை முற்றிலுமாகத் தடை செய்து, இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பதே நமது அரசின் முதல் கடமை.
  • தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்.
  • பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். இதை தவிர வேறு எவருக்கும் மரண தண்டனை கிடையாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்றிருக்கின்ற அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
    n மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி அமைச்சகம் மற்றும் தனி அமைச்சர் உருவாக்கப்படும். மேலும் தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கான இடப்பங்கீட்டில் 5% மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்படும்.
  • நாம் தமிழர் அரசு வேளாண்மையை அரசுப்பணியாக அறிவித்து, உழவர்களை அரசு ஊழியர்களாக மாற்றும்.
  • வேதி உரங்கள் நாம் தமிழர் ஆட்சியில் முழுமையாகத் தடை செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக இயற்கை உரங்களைப் பயன்படுத்த மற்றும் உருவாக்க உழவர்கள் பயிற்றுவிக்கப்படுவர்.
  • கச்சத்தீவு ஒப்பந்தம் நீக்கப்பட்டு, நமது மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்காக தனியே ஒரு சிறப்புக் கடலோர காவல் படை, “நெய்தல் படை” என்ற பெயரில் உருவாக்கப்படும்.
  • தூய்மைப் பணிக்கு உயர்ந்த ஊதியம் அளிக்கப்படும்
  • ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படும்.
  • ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள உயர் கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றும் உரிமை வலியுறுத்திப் பெறப்படும்.
  • மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு எந்த வகையான தேசிய நுழைவுத் தேர்வும் அனுமதிக்கப்படாது. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது நாம் தமிழர் கட்சி.
    தொடர்ந்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சீமான் பேசியபோது, ‘‘இந்த அறிக்கையில் உள்ளவை எல்லாம் எங்கள் கனவுகள். இதில் உள்ளவை எல்லாம் செய்யமுடியாதவை இல்லை. இவையெல்லாம் உலக நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என நாங்கள் பயணிக்கிறோம்’’ என்றார்.
Tags : Nam Tamil Party ,Chennai ,Tamil Nadu Party ,TAMIL PARTY ,TAMIL NAGAM ,PUDUCHERRY ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...