சென்னை: தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் இயங்கும் மாநில திட்டக் குழு, இந்த பதவிக்காலத்தில் 100க்கும் மேற்பட்ட அறிக்கைகளை தயாரித்துள்ளது. மதிப்பீட்டு ஆய்வுகள், அரசு திட்டங்களின் தாக்க மதிப்பீடுகள், ஆராய்ச்சி ஆய்வுகள், துறை சார்ந்த ஆய்வுகள், கொள்கை ஆவணங்கள் மற்றும் உத்தி ஆவணங்கள் என பலவகையான ஆவணங்கள் இதில் அடங்கும். வேளாண்மை, நகர்ப்புற வளர்ச்சி, தொழில் மற்றும் தொழில்நுட்பம், சமூக நலன், சுகாதாரம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை, நீர் மேலாண்மை, வன வளம் மற்றும் உயிர்ப்பன்மை, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, ஆட்சி மற்றும் நிதி என்று பல்வேறு துறைகளில் இந்த அறிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட பதினைந்து ஆய்வறிக்கைகள் மற்றும் சிறப்பு அறிக்கைகளை துணை முதல்வரும், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் நேற்று வழங்கினர்.
