×

மடப்புரம் காவலாளி மரணம் தொடர்பான நிகிதாவின் நகை மாய வழக்கு முடித்து வைப்பு

 

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியை நிகிதாவின், நகை மாயமான புகாரின் மீது விசாரிப்பதற்காக, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீசார் கடந்தாண்டு ஜூன் 27ல் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, தனிப்படை காவலர்கள் 6 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில், மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவக்குமார், ஏட்டு இளையராஜா ஆகியோரையும் சேர்த்துள்ளனர்.

நேற்று நகை திருட்டு தொடர்பான வழக்கின் விசாரணை, மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிபதி கே.செல்வபாண்டி முன் பேராசிரியை நிகிதா ஆஜரானார். அப்போது சிபிஐ தரப்பில், ‘நகை மாயமான புகாரில் நகையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இந்த வழக்கை முடித்து வைக்க விரும்புகிறோம்’ என கூறப்பட்டது.

இதை நிகிதா ஏற்பதாக சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நிகிதா தரப்பு விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறினார். இதையடுத்து நகை மாயமான புகாரை முடித்து வைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் கூறி நிகிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நகை மாயம் குறித்து நிகிதாவின் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி கூறினார்.

Tags : Madapuram ,temple ,Nikitha ,Madurai ,Thirumangalam ,Madapuram temple guard ,Ajithkumar ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்;...