×

மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதே அரசின் கடமை கல்வி முறையை நவீன மயமாக்கி மேம்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

 

புதுடெல்லி: கல்வி முறையை நவீன மயமாக்கி மேம்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வளர்ச்சி திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இன்று கிராமங்கள், நகரங்களுக்கு அப்பால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் புதிதாக ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

அத்துடன், நம் இளைஞர்கள் குறிப்பாக இளம் பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்கால தொழில்நுட்பங்களை பற்றி பேசும்போது, வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் எந்த இளைஞரும் இந்த ஆர்வத்தில் இருந்து பின்வாங்காத சூழல் இருப்பது அவசியம்.

இளம் ஆராய்ச்சியாளர்கள் புதிய சிந்தனைகளுடன் பணியாற்றுவதற்கு ஏராளமான வாய்ப்புகளை பெறும் ஆராய்ச்சி சூழலை உருவாக்க வேண்டும். நாம் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தும் அதேசமயம், நாட்டின் கல்வி துறையை நவீன மயமாக்கி, அதை உண்மையான உலக பொருளாதாரத்துடன் இணைக்கும் செயல்முறைகளை விரைவுப்படுத்த வேண்டும்.
மக்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதே அரசின் மிக முக்கிய கடமையாகும். கல்வி, சுகாதாரம், சுற்றுலா, திறன் மேம்பாடு, விளையாட்டு, கலாச்சாரம் ஆகியவை மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான ஊடகங்களாக செயல்படுகின்றன” என்று தெரிவித்தார்.

Tags : Modi ,New Delhi ,Modi… ,
× RELATED ஒரே கட்டமாக நடக்கிறது: தமிழகத்தில்...