×

சேரன்மகாதேவியில் 2வது நாளாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

வீரவநல்லூர், பிப்.11: சேரன்மகாதேவியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. சேரன்மகாதேவி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வ சுந்தரி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் இசக்கிமுத்து, முக்கூடல் ஆக்னல், வீரவநல்லூர் மாசானம் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் கற்பகம், ஒன்றிய தலைவர் ரவி கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இரவு 9மணி வரை நடந்த போராட்டத்தில் சுமூக முடிவு எட்டாததால் நேற்று சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் காலை முதல் மாலை 3 மணி வரை சப்-கலெக்டர் அலுவலக கேட் மூடப்பட்டு வாசலில் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகள் சப்கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழையாதவாறு காவல் இருந்தனர்.

இதனால் மாற்றுத்திறனாளிகள் சப்கலெக்டர் அலுவலகம் முன்பு மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில் 1 வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர். ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் பிப்.17 முதல் சாகும்வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மாற்றுத்திறனாளிகள் அறிவித்தனர். இதையொட்டி சப்கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.அம்பை :  அம்பை  தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. 2வது நாளாக நேற்றும் மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென தாலுகா அலுவலத்தின் முன்பு கூடி முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்திற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க இணைத்தலைவர் அகத்தியராஜன் தலைமை வகித்தார். அம்பை ஒன்றிய தலைவர் சுரேஷ்பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர் சுடலைமணி முன்னிலையில் நடந்தது. அம்பை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 34 மாற்றுத்திறனாளிகளை தடுத்து கைது செய்தனர்.

பரிதவித்த மாற்றுத்திறனாளிகள்
சேரன்மகாதேவி தாலுகா அலுவலகம் முன்பும், 2வது நாளாக சப்கலெக்டர் அலுவலகம் முன்பும் மாற்றுத்திறனாளிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதைகளை கழிக்க இடமின்றி அவதிக்குள்ளாகினர். மேலும் சாலையோரம் சரியாக அமர இடமில்லாமல் வீதிகளில் அமர்ந்திருந்து போராட்டம் நடத்தியதால் அவர்கள் போராட்டம் முடிந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

Tags : protest ,
× RELATED பெரம்பலூரில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!