×

திருவண்ணாமலையில் வரும் 26ம் தேதி வரை நடக்கிறது ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாமில் 1,086 இளைஞர்கள் பங்கேற்பு

* நள்ளிரவு கடும் குளிரிலும் காத்திருந்தனர்
* இன்று 1,520 இளைஞர்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை, பிப்.11: திருவண்ணாமலையில் நேற்று தொடங்கிய ராணுவத்துக்கான நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் 1,086 இளைஞர்கள் பங்கேற்றனர். சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், இந்திய ராணுவத்துக்கான நேரடி ஆட் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த முகாமில், சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர், மற்றும் ஸ்டோர் கீப்பர், சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
இந்த முகாம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, முகாம் ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்த இளைஞர்களுக்கு மட்டுமே இந்த முகாமில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, தினமும் சராசரியாக 1,500 இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாளான நேற்று 1,550 இளைஞர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பியிருந்தனர். அதில், 1,086 இளைஞர்கள் மட்டும் பங்கேற்றனர்.மேலும், கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை சான்று கொண்டுவந்த இளைஞர்களுக்கு மட்டுமே முகாமில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. பரிசோதனை சான்று இல்லாத இளைஞர்கள், நுழைவு வாயில் பகுதியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அலுவலக இயக்குநர் கர்ணல் கவுரவ் சேத்தி தலைமையில், அதிகாலை 3 மணிக்கு உடல் தகுதித்தேர்வு தொடங்கியது. 1.6 கிமீ தூரம் ஓட்டப்பந்தயத்தில், நிர்ணயிக்கப்பட்ட நேர அளவுக்குள் ஓடி முடித்த 106 இளைஞர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

ஓட்டத்தில் தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு, உயரம் தாண்டுதல், 9 அடி கால்வாய் தாவுதல், புல் அப், ஜிக் ஜாக் பேலன்ஸ் உள்ளிட்ட உடல் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான தகுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
உடல் தகுதித்தேர்வு நடைபெற்ற விளையாட்டு மைதான பகுதியில், அனுமதி அட்டை வைத்திருந்த இளைஞர்களை தவிர, வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல், நள்ளிரவில் இருந்தே விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் காத்திருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், எடை போன்றவற்றை சரிபார்க்கும் பணியில் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும், முகாம் நடந்த பகுதியில், முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவ குழுவினரும் முகாமிட்டிருந்தனர். ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் தொடர்ந்து வரும் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது நாளான இன்று நடைபெறும் முகாமில் பங்கேற்க, 1,520 இளைஞர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : youths ,army recruitment camp ,Thiruvannamalai ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்