×

ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள்: ராகுல் காந்தி பாராட்டு

புதுடெல்லி: “ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள். பெண்கள் அசாதாரண மாற்றங்களை கொண்டு வர முடியும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் அண்மையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய காணொலி ஒன்றை மகளிர் தினமான நேற்று, தன் யூடியூப் சேனல் மற்றும் எக்ஸ் தளத்தில் வௌியிட்டுள்ளார். அதில், இளம் மாணவிகளுடன் நடத்திய உரையாடல் சுவாரஸ்யமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார். அத்துடன், “ஒவ்வொரு மாணவரின் கனவுகள், ஆர்வம், தன்னம்பிக்கையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

பெண்கள் தங்கள் திறனை உணர்ந்து திறந்த மனதுடன் முன்னேறினால், அசாதாரண மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை இதுபோன்ற உரையாடல்கள் வௌிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பெண்ணும் தனித்துவமானவர்கள். அவர்களின் உணர்திறன், புரிதல் மற்றும் நுண்ணறிவு ஆகியவை சமூகத்துக்கு சமநிலையையும், வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. பெண்களும் தங்களின் தனித்துவமான வழிகளில், பொறுமை, தொலைநோக்கு பார்வை மற்றும் இரக்க குணம் ஆகியவற்றுடன் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

எனவே, அவர்களின் அடையாளம், ஆளுமை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப முன்னேற அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பெண்களே தலைவிகளாக இருந்து குடும்பத்தை வழிநடத்தும் சூழலில் நான் வளர்ந்தேன். எனது பாட்டி இந்திரா காந்திதான் என் குடும்பத்தின் தலைவி.

பெண்கள் பொதுவாகவே ஆண்களைவிட புத்திசாலிகள். ஆண்கள் அவசரப்படுவார்கள். முட்டாள்தனமான விஷயங்களில் கண்மூடித்தனமாக இருப்பார்கள். பெண்கள் முடிவெடுக்கும் முறை ஆண்களிடமிருந்து வேறுபடுகிறது. பெண்கள் எப்போதும் நேரடியாக அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை. மறைமுக சக்தியை பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,Opposition Leader ,Kerala ,Women’s Day ,
× RELATED தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்க்க...