×

மது அருந்தி, பிரியாணி சாப்பிட ரூ.6 லட்சம் மதிப்பு மின்கேபிள் திருடிய சிறுவர்கள் பிடிபட்டனர்

 

பெரம்பூர், மார்ச் 9: பெரம்பூர் ராஜேஸ்வரி தெருவை சேர்ந்தவர் ராஜா (51), வியாசர்பாடி பகுதியில் பந்தல் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் வியாசர்பாடி ரத்தினம் முதல் தெருவில் சொந்தமாக புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு இவர் கட்டி வரும் புதிய வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் சுமார் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் கேபிள்களை கட் செய்து எடுத்துச் சென்று விட்டனர்.  மறுநாள் காலை வேலையாட்கள் சென்று பார்த்தபோது மின் கேபிள்கள் அனைத்தும் கத்தியால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் வியாசர்பாடி பி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த கரண் (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவர்கள் நான்கு பேர் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என 6 பேர் எலக்ட்ரிக்கல் கேபிள்களை வெட்டி எடுத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கரண் உள்பட ஐந்து சிறுவர்களையும் கைது செய்த போலீசார் கரண் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவர்கள் ஐந்து பேரையும் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் சுமார் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள மின் கேபிள்களை வெட்டி எடுத்து மது குடிப்பதற்கும் பிரியாணி சாப்பிடுவதற்கும் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

Tags : Perambur ,Raja ,Rajeshwari Street, Perambur ,Vyasarpadi ,Ratnamul Street ,Vyasarpadi… ,
× RELATED உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்