×

நெல்லையில் ஒரே பிரச்னைக்கு 2 வழக்கா? தீயணைப்பு துறையில் லஞ்ச புகார் விவகார வழக்கில் விசாரணைக்கு தடை: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

 

சென்னை: நெல்லை தீயணைப்புத்துறையில் மண்டல இயக்குநர் அலுவலகத்தில் பணம் பிடிபட்ட விவகாரத்தில், ஒரு பிரச்னைக்கு 2 வழக்கு எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை, நெல்லை போலீஸ் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி ஊழல் தடுப்புத்துறை போலீசார், நெல்லை தீயணைப்பு துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபுவின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரூ.1.6 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் மீதும், காவலர் செந்தில்குமார் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த லஞ்சப் பணத்திற்கு ஒரு சில நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் மண்டல தீயணைப்புத்துறை அதிகாரி, சம்பவம் நடந்த மறுநாள் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எடுத்த பணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை.

எனது அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை வைத்து விட்டதாக கூறியிருந்தார். அந்த புகாரில் பெருமாள்புரம் காவல்துறை இரண்டாவதாக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் காவலர் ஆனந்த் மற்றும் சில நபர்கள் மீது பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஆனந்த் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டாவது முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும், ஒரே சம்பவத்திற்கு இருவேறு காவல்துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரணை செய்வது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது என்று கூறி மனு தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருப்பதையே வாதமாக முன்வைத்தார்.

இதை பதிவு செய்து கண்ட மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி, காவலர் ஆனந்த் மற்றும் மற்ற குற்றவாளிகளை ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து விசாரணை செய்ய வழிவகை இருந்தும் எதற்காக பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்து விசாரணை செய்ய என்ன அவசியம் வந்தது என்று கேள்விகளை முன்வைத்தார். இதை தொடர்ந்து வழக்கை வருகிற ஏப்ரல் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி விஜயகுமார், ஒரே சம்பவத்திற்கு இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பெருமாள்புரம் முதல் தகவல் அறிக்கை மீதான விசாரணைக்கு தடை உத்தரவு பிறப்பித்தார்.

Tags : Nellai ,Madurai High Court ,Chennai ,Nellai Fire Department ,
× RELATED தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர்...