×

சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது

 

சென்னை: சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது. கடந்த 5ம் தேதி ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் முன்னிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்பங்களில் சில மாற்றங்களை செய்த பிறகு பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்தார்

18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் வேளச்சேரி – பரங்கிமலை இடையே ரயில் சேவை இன்று தொடங்கியது. ரூ.734 கோடி செலவில் 3 புதிய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் ரயில் நிற்காது. தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு, பறக்கும் ரயில் சேவையை வேளச்சேரியிலிருந்து புனித தோமையர் மலை வரை இன்று முதல் விரிவாக்கியுள்ளது. ரூ.734 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த 4.5 கிலோமீட்டர் மேம்பாலம் சென்னையின் தெற்கு புறநகர் மக்களை நேரடியாக நகர மையத்துடன் இணைக்கிறது.

1965ல் திட்டக் கமிஷன் அமைத்த குழு பக்கிங்காம் கால்வாய் ஓரமாக 39 கி.மீ. நீளத்தில் ரயில் வழித்தடம் அமைக்க பரிந்துரைத்தது. 1983-84ம் ஆண்டு ஒன்றிய அரசு பறக்கும் ரயில் சேவை திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியது. ஆரம்ப மதிப்பீடு ரூ.53.46 கோடி, 1991ல் கட்டுமானம் தொடங்கியது.

1995 நவம்பர் 1ம் தேதி சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை இந்த ரயில் சேவை தொடங்கியது. இது இந்தியாவின் முதல் மேம்பாலம் ரயில் சேவை என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றது. 1997 அக்டோபரில் திருமயிலை(மயிலாப்பூர்) வரை நீட்டிக்கப்பட்டு முதல் கட்டம் முழுமையடைந்தது. ரூ.53 கோடி மதிப்பீடு இறுதியில் ரூ.269 கோடியாக உயர்ந்தது.

2004 ஜனவரி 26ல் மயிலாப்பூர் முதல் திருவான்மியூர் வரை சேவை தொடங்கியது. 2007 நவம்பர் 19ல் திருவான்மியூரிலிருந்து வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. வேளச்சேரி சேவை தொடங்கியவுடன் தினசரி வருவாய் ரூ.84,000ல் இருந்து ரூ.2.31 லட்சமாகவும், பயணிகள் எண்ணிக்கை 7,000ல் இருந்து 21,000 ஆகவும் உயர்ந்தது. 2008ல் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ரூ.495 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி – பரங்கி மலை திட்டத்தை தொடங்கி வைத்தார். புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் என இரண்டு புதிய நிலையங்கள் திட்டமிடப்பட்டன.

2010ல் இந்த பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்தல் பிரச்னை மற்றும் நீதிமன்ற வழக்குகளால் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நிறுத்தப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் இதே வழித்தடத்திற்கு மேலே அமைந்ததால் ஒருங்கிணைப்பு சிக்கல்களும் உருவாயின. 2020ல் திட்டம் மறுதொடக்கம் பெற்றபோது மதிப்பீடு ரூ.730 கோடியாக உயர்ந்திருந்தது. 2024 ஜனவரி 18 அன்று ஆதம்பாக்கம் – பரங்கிமலை இடையே கட்டப்பட்ட கான்கிரீட் கார்டர் வீழ்ந்தது. இதனால் மீண்டும் கட்டுமான பணிகள் தாமதமானது.

பின்னர் சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி சுமை ஆய்வு சோதனை நடத்தி கட்டமைப்பு உறுதி சான்றிதழ் வழங்கியது. இந்தாண்டு மார்ச் 5 அன்று ரயில் பாதுகாப்பு தலைமை ஆணையர் புதிய வழித்தடத்தில் விரிவான பாதுகாப்பு ஆய்வு நடத்தினார். மார்ச் 11 அன்று தற்காலிக இயக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிகபட்ச வேகம் மணிக்கு 55 கி.மீ. என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ரயில் சேவையில் ஆதம்பாக்கம் நிலையத்தில் தற்போது ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது. நிறுத்தம் தொடங்கும் தேதி தனியாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையால் பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி மக்கள் நேரடியாக பரங்கிமலை வந்து புறநகர் ரயில் அல்லது மெட்ரோவில் மாறி ஏறலாம்.

ஒஎம்ஆர் கோரிடோரில் பணிபுரிவோர் பரங்கிமலை சந்திப்பில் தாம்பரம் பக்கம் செல்லும் புறநகர் ரயிலை பிடிக்கலாம். சாலை நெரிசலிலிருந்து நிம்மதி கிடைக்கும். பரங்கிமலையில் பறக்கும் ரயில் சேவை மேம்பாலம், புறநகர் ரயில், சென்னை மெட்ரோ ஆகிய மூன்றும் இணைகின்றன. இது சென்னையின் முதல் முழுமையான மல்டிமோடல் ட்ரான்சிட் ஹப் ஆகும்.

Tags : Chennai Velacheri ,Parangimalai ,Chennai ,Chief Commissioner of Railway Safety ,
× RELATED பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை...