* அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி சுவி 2ம் இடம் பிடித்து அசத்தல்: சென்னை மாணவன் 7வது இடம் பிடித்தார்
சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் 958 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி சுவி இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். சென்னை சேர்ந்த மாணவன் 7வது இடம் பிடித்தார். நான் முதல்வன் திட்டத்தில் படித்த 56 மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது.
கடந்த ஆண்டு (2025ம் ஆண்டு) 979 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதில், சுமார் 7 லட்சம் பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் 24 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு மே 25ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஜூன் 11ம் தேதி முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது.
இதில் இந்தியா முழுவதும் 14,161 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு ஆகஸ்ட் 22ம் தேதி, 23ம் தேதி, 24ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 30ம் தேதி, 31ம் தேதி என 5 நாட்கள் நடந்தது. தொடர்ந்து மெயின் தேர்வு ரிசல்ட் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2736 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 162 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான நேர்காணல் கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை நடந்தது. நேர்காணல் முடிவடைந்ததையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in நேற்று மாலை வெளியிட்டது. இதில் அகில இந்திய அளவில் 958 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் 60 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த மருத்துவரான அனுஜ் அக்னிகோத்ரி (26), அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவி அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்த இவர் குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 11வது இடம் பிடித்து துணை ஆட்சியராக தேர்வானார். ராஜேஸ்வரி சுவி தற்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய அளவில் 3வது இடத்தை சண்டிகரை சேர்ந்த அகான்ஷ் துல் மூன்றாமிடமும் பிடித்துள்ளார்.
தேர்ச்சி பெற்ற 958 பேரில் 659 பேர் ஆண்கள், 299 பேர் பெண்கள் ஆவர். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா மொஹைதீன் என்பவர் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியலில் 7வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். தேர்ச்சி பெற்றவர்களில் 317 பேர் பொதுப்பிரிவினர், 306 பேர் ஓபிசி, 158 பேர் எஸ்சி, 73 பேர் எஸ்டி பிரிவிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் டாப் 10 இடங்களுக்குள் வந்ததே இல்லை. கடைசியாக 2015ல் சரண்டா அரி அகில இந்திய அளவில் 7வது பிடித்திருந்தார்.
அதன் பிறகு இப்போது தான் டாப் 10க்குள் தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. யுபிஎஸ்சி தேர்வில், நான் முதல்வன் ஊக்கத்தொகையுடன் கூடிய உறைவிடப் பயிற்சித் திட்டத்தில் பயனடைந்த மாணவி ராஜேஸ்வரி சுவி இந்திய அளவில் 2ம் இடமும் நான் முதல்வன் ஊக்கத்தொகைத் திட்டத்தில் பயனடைந்த மாணவன் ராஜா மொஹைதீன் 7ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், தான் முதல்வன் ஊக்கத்தொகையுடன் கூடிய உறைவிடப் பயிற்சி திட்டத்தில் பயனடைந்த மாணவன் அருண்குமார் முதன்மைத் தேர்வினை முழுதும் தமிழில் எழுதி 585ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் நான் முதல்வன் ஊக்கத்தொகைத் திட்ட பயனாளிகள் 50 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது 56 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த 56 மாணவர்களுள், 39 பேர் நான் முதல்வன் திட்டம் மற்றும் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் இணைந்து நடத்திய உறைவிடப் பயிற்சித் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: யுபிஎஸ்சி 2025ம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 39 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள்.
மேலும் இந்திய அளவில் 202க்கும் அதிகமானவர்கள் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி சுவி அகில இந்திய அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழக அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். இவர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் முதல்நிலை தேர்வு சீரிஸ், இன்டர்வியூ ப்ரோகிராம் மற்றும் சோசியாலஜி ஆப்சனல் பயிற்சிகளை நான் முதல்வன் திட்டத்தின் இணைப்பில் பெற்றார்.
ராஜா மொஹைதீன் என்ற மாணவன் அகில இந்திய அளவில் 7வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் 2வது இடத்தையும் பெற்றுள்ளனர். இத்தேர்வில் அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த 4 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது அஜய் ஆர்.ராஜ் (பார்வை குறைபாடு) அகில இந்திய அளவில் 109 இடமும், ஜசீலா (பார்வை குறைபாடு) அகில இந்திய அளவில் 397வது இடம், காஜல் ராஜூ (எலும்பியல் மாற்றுதிறன்) 167வது இடம், எஸ்.சஞ்சய் (கேள்வித்திறன் குறைபாடு) 953வது இடமும் பிடித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
