- இங்கிலாந்து
- சூர்யகுமார்
- மும்பை
- ஆட்சி சாம்பியன்கள்
- இந்தியா
- 10 வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்
- மும்பையின் வான்கேட் ஸ்டேடியம்
மும்பை: 10வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 89, சிவம் துபே 43, இஷான் கிஷன் 39 , ஹர்திக் பாண்டியா 27, திலக்வர்மா 21ரன் அடித்தனர்.
பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் 48 பந்தில் 8 பவுண்டரி,7 சிக்சருடன் 105, வில்ஜாக் 35 ரன் அடித்தனர். 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே எடுத்தது. இதனால் 7 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றிபெற்றது. இந்திய பவுலிங்கில் பாண்டியா 2, பும்ரா, அக்சர், வருண், அர்தீப்சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் இந்தியா 4வது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது.
வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: பைனலுக்கு தகுதி பெற்றிருப்பது நம்ப முடியாத விஷயம்;. சொந்த மண்ணில் பைனலுக்கு அழைத்துச் செல்வது உண்மையிலேயே மகிழ்ச்சி. சாம்சனுக்கு பாராட்டுக்கள். இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை தான் தொடக்க வீரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு போட்டியை தங்கள் பக்கம் இழுத்து வெற்றி பெற்றிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பும்ராவின் சிறப்பான பந்துவீச்சும் ஒரு காரணம். வீரர்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். அதற்கு பயிற்சியாளர் திலீப்புக்கு தான் பாராட்டுதெரிவிக்க வேண்டும்.
பேட்டிங் வரிசையில் டாப் 3 மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும். பிறகு கண்டிப்பாக சூழலுக்கு ஏற்ப மாறும். நான் களத்தில் இருக்கும்போது உண்மையிலேயே பதற்றத்துடன் இருந்தேன். இதயம் நிச்சயம் நிமிடத்திற்கு 160 லிருந்து 175 முறை துடித்திருக்கும். சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல பைனலுக்கு செல்கிறோம். நிச்சயம் அழுத்தம் இருக்கும். ஆனால் பைனலில் ஆட வீரர்கள் உற்சாகத்தில் உள்ளனர், என்றார். நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெறும் பைனலில் இந்தியா, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் பும்ரா தான்;
ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் கூறியதாவது: கடந்த போட்டியில் எனக்கு நல்ல ஃபார்ம் கிடைத்தது. அதை இந்த போட்டிக்கும் எடுத்துச் செல்ல நினைத்தேன். எனது பேட்டிங்கை முழுமையாக அணிக்கு பயன்படுத்த முடிவு செய்தேன். அதற்காக கொஞ்சம் நான் நேரம் எடுத்துக் கொண்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது. இந்த மைதானத்தில் 250 ரன் இருந்தாலும் போதாது என தெரியும். மிக முக்கியமாக பும்ரா உலகத்தரமான பவுலர். அவர் கடைசியில் வீசிய 2ஓவர் மிகவும் முக்கியமானது. அவர் மட்டும் இல்லாமல் இருந்தால் நான் இங்கு நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது. உண்மையில் இந்த விருது அவருக்குதான் சென்றிருக்கவேண்டும்” என்றார்.
கேட்ச்சை தவறவிட்டது தான் காரணம்!
இங்கி.லாந்து கேப்டன் ஹாரி புரூக் கூறியதாவது: ஆடுகளம் பவுலிங்கிற்கு ஒத்துழைக்கும், சுழற்பந்து வீச்சு எடுபடும் என கணித்திருந்தோம். ஆனால் பேட்டிங்கிற்கு முழுமையாக சாதகமாக மாறிவிட்டது. நான் செய்த மிகப்பெரிய தவறு சாம்சனின் கேட்ச்சை தவறவிட்டதுதான். அது எங்கள் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது, பெத்தேலின் ஆட்டம் நம்ப முடியாத அளவிற்குச் சிறப்பாக இருந்தது. அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது. 250 ரன்னுக்கு மேல் இலக்கு என்ற நிலையில் மற்ற அணிகள் எளிதாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு சுருண்டிருக்கும். ஆனால் எங்கள் வீரர்கள் இறுதிவரை விடாமுயற்சியுடன் போராடினர். இந்த தொடர் முழுவதும் அணி விளையாடிய விதம் குறித்து நாங்கள் பெருமைப்பட வேண்டும்” என்றார்.
திருப்புமுனை ஏற்படுத்திய கேட்ச்;
அர்ஷ்தீப் சிங் வீசிய, 14வது ஓவரில் வில் ஜாக்ஸ் பந்தை ஸ்வீப்பர் கவர் திசை நோக்கி அடித்தார். அப்போது, நீண்ட தூரம் ஓடிவந்த அக்சர் படேல், பந்தைப் பிடித்தார். ஆனால், தாம் பவுண்டரி லைனை கடந்து விடுவோம் என்று உணர்ந்து, பந்தை அருகிலிருந்த சிவம் துபேவிடம் அழகாகத் தட்டிவிட்டார். துபே அதனை மிக லாவகமாகப் பிடித்தார். இந்த அசாத்தியமான கேட்ச் தான் ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
கட்டுக்கோப்பாக பந்து வீசிய பும்ரா;
பும்ரா 4 ஓவரில் 33 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். விக்கெட் கணக்கை மட்டும் வைத்துப் பார்த்தால் இது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், ஆட்டத்தின் போக்கை மாற்றியது பும்ரா தான். இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில் 69 ரன் தேவைப்பட்டது. களத்தில் பெத்தேல் நின்றிருந்ததால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அந்த இக்கட்டான நேரத்தில் 16வது ஓவரை வீசிய பும்ரா வெறும் 8 ரன் மட்டுமே கொடுத்தார். அடுத்து 17வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் 16 ரன்களைக் கொடுத்தார். மீண்டும் 18வது ஓவரை வீச வந்த பும்ரா,வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
உற்சாகத்தில் துள்ளி குதித்த டோனி மனைவி சாக்ஷி;
நேற்றைய ஆட்டத்தை பிரபலங்கள் பலரும் நேரில் கண்டுரசித்தனர். முன்னாள் கேப்டன் டோனி, மனைவி சாக்ஷியுடன் போட்டியை ரசித்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் பெத்தேல் ரன்அவுட் ஆன போது சாக்ஷி துள்ளிகுதித்து மகிழ்ந்தார்.
ஐசிசி தொடரில் 15வது முறையாக பைனலில் இந்தியா!
டி.20 உலக கோப்பையில் 4வது முறையாக பைனலில் ஆடும் ஒரே அணி இந்தியா தான். இதற்கு முன் இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து 3 முறை ஆடி உள்ளது. மேலும் ஒருநாள், டி.20ல் தலா 4, சாம்பியன் டிராபில் 5, டெஸ்ட் சாம்பியன் ஷிப்பில் 2 என ஐசிசி தொடர்களில் இந்தியா 15 வதுமுறையாக பைனலில்ஆட உள்ளது. இதற்கு முன் ஆஸி.14 முறை பைனலில் ஆடி இருக்கிறது.
