சென்னை: வழக்கறிஞர்கள் தங்கள் பணியில் சமூக நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 54வது தலைமை நீதிபதியாக 2025 ஜூலை 21ம் தேதி பதவி ஏற்ற நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவுக்கு பிரிவு உபசார உரை நிகழ்த்திய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்புக்கு அதிகமாக தலைமை நீதிபதி பணியாற்றியுள்ளார்.
உண்மையான பொது நல வழக்குகளை கண்டறிந்து அவற்றை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகள் பிறப்பித்தார். தேவையில்லாமல் விளம்பரத்திற்காக பதிவான வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளார் என்று பேசினார். நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ஏற்புரையாற்றியதாவது: இந்திய நீதித்துறையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பங்கு மிக முக்கியமானது. 150 ஆண்டுகள் பழமையான சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தது குறித்து பெருமை கொள்கிறேன்.
இந்த நீதிமன்றம் சுதந்திரத்திற்கு முன்பே முதல் இந்திய நீதிபதியான முத்துசாமி அய்யரையும், முதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்யம் ஐயங்காரையும், சுதந்திரத்திற்கு பிறகு முதல் தலைமை நீதிபதியான ராஜமன்னாரையும் தந்துள்ளது. இந்திய நீதித்துறைக்கான மெட்ராஸ் சட்ட இதழும் முதன் முதலில் இந்த நீதிமன்றத்திலிருந்துதான் வெளிவந்தது. வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்காக வாதிடுவது மட்டுமல்லாமல் சமூக நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மனம் மற்றும் உடல் நலம் நீதி பரிபாலனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தங்கல் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் 4000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் நீதித்துறைக்கு பங்காற்றி வருகிறார்கள்.
இளம் வழக்கறிஞர்களுக்காக சென்னையில் நிரந்தர வழக்கறிஞர் பயிற்சியகம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற பதிவாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், ஊழியர்கள், மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
