சென்னை: ‘உற்பத்தி பகுப்பாய்வில்’ முதுகலை பட்டயப் படிப்பை அறிமுகம் செய்துள்ள சென்னை ஐஐடி, இதற்கு மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உற்பத்தித் துறை வல்லுநர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் மேம்பட்ட திறன்களை வழங்கும் வகையில் இந்த ஓராண்டு கால இணையவழிப் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடங்கியிருப்பதன் மூலம் தொழில்துறைக்கு தேவையான முதுகலைப் பாடத்திட்டங்களை ஐஐடி மெட்ராஸ் மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த டிப்ளமோ படிப்பின் முதல் பேட்ச் வகுப்புகள் வருகிற செப்டம்பர் 7ம் தேதி தொடங்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மே 31ம் தேதிக்குள் < https://code.iitm.ac.in/pgdma > என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ஆண்டொன்றுக்கு (செப்டம்பர்-ஆகஸ்ட்) மூன்று பருவங்களாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பட்டயப் படிப்பு, மொத்தம் 90 கிரெடிட்களை கொண்டுள்ளது. இதுவே இப்படிப்பின் கல்வித் தரம், செயல்முறை விளக்கத் தன்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.பி.எஸ்சி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் உள்பட தொடர்புடைய துறைகளில் மூன்று ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
