×

ஆரோவில் நிலத்தை விற்று முறைகேடு? ஆளுநர் ஆர்.என்.ரவி மீது ரூ.350 கோடி ஊழல் புகார்: பெண் ஐஏஎஸ் அதிகாரியும் உடந்தை: விழுப்புரம் எஸ்பியிடம் பரபரப்பு மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தில் நிலம் பரிவர்த்தனை என்ற பெயரில் பல கோடி மதிப்பிலான நிலங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து ரூ.350 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்ததாக ஆரோவில் பவுண்டேஷன் சேர்மன் பதவி வகித்து வரும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் பதவியில் உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி மீது விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது.

தமிழகம்-புதுச்சேரி எல்லையில் ஆரோவில் சர்வேதச நகரம் உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் இங்கு சுற்றுலா பயணிகள் வருவது மட்டுமின்றி, வசித்தும் வருகின்றனர். இங்குள்ள ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக தமிழக கவர்னர் ஆர்.என் ரவியும், செயலாளர் பதவியில் குஜராத் கேடரை சேர்ந்த ஜெயந்தி ஐஏஎஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் நிர்வாகம் முழுவதும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இங்குள்ள நிலம், சட்டம் ஒழுங்கு பிரச்னை அனைத்தையும் மாநில அரசே கவனித்து வருகிறது.

இதனிடையே ஆரோவில் பகுதிக்கு சொந்தமான நிலங்களை பரிவர்த்தனை என்ற பெயரில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து பல கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்து ஆரோவில் பவுண்டேஷன் பொறுப்பில் இருப்பவர்கள் பலனடைந்து வருவதாக நேற்று ஆரோவில் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் அருண்அம்பதி, பிரபு, பாலமுருகன் ஆகியோர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் வந்து விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தனித்தனியே 3 புகார் மனுக்களை அளித்தனர்.

பிறகு ஓய்வுபெற்ற ராணுவஅதிகாரி அருண்அம்பதி கூறுகையில், ‘‘ஆரோவில் பவுண்டேஷனுக்கு சொந்தமாக 3,300 ஏக்கர் நிலங்கள் இருக்கிறது. ஒருசில நிலங்களை தேவையில்லை என்று இவர்களே முடிவெடுத்து தனியாருக்கு விற்பனைக்கு கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக மாற்று இடம் வேண்டும் என்று வாங்கிக்கொள்கின்றனர். இந்த நிலம் பரிவர்த்தனையில் இன்று நாங்கள் புகார் கொடுத்தது 16 ஏக்கர். பல கோடி விலைமதிப்புள்ள இந்த நிலத்தை தனிநபரிடம் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக விலைமதிப்பு குறைவாக பின்புறம், ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தை வாங்கி ஊழல் செய்துள்ளனர்.

இந்த ஊழல் குறித்துதான் நாங்கள் புகார் அளித்திருக்கிறோம். எஸ்பி இந்த புகாரை பாசிட்டிவாக எடுத்திருக்கிறார். ஆரோவில் பகுதிக்கான நிலம், சட்டம் ஒழுங்கு தமிழ்நாடு அரசிடம்தான் இருக்கிறது. இவர்கள் செய்கிற ஊழலை கேள்வி கேட்டாலோ, புகாராக கொண்டு சென்றாலோ வீட்டில் இணையதளம் துண்டிப்பு போன்ற நடவடிக்கைக்கு நாங்கள் ஆளாகிறோம். பல சித்ரவதைகளை செய்திருக்கின்றனர். ஒவ்வொரு விஷயமாக நாங்கள் வெளியே கொண்டு வருவோம். செம்மரம், மணல் கடத்தல் போன்ற பல புகார்கள் டிரஸ்ட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

மற்றொரு புகார்தாரரான பாலமுருகன் கூறுகையில், ‘‘ஆரோவில் பகுதியில் நிலத்தை விற்பனை செய்வதற்கு அனுமதியில்லை. ஆரோவில் டிரஸ்டில் சொந்த பணத்தை கொடுத்து வாங்கிய நிலத்தை 2021ல் பதவியேற்ற இவர்கள் ஆரோவில் வளர்ச்சிக்கு ஏதும் செய்யாமல், டிரஸ்ட் வாங்கிய நிலத்தை அடிமட்ட விலைக்கு விற்றுகொண்டிருக்கின்றனர். ஆரோவில்லுக்கு மட்டும் நஷ்டம் கிடையாது. அரசுக்கு பலகோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ஆரோவில்லுக்கு ரூ.350 கோடி இழப்பு. இந்த பணம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை. நிலம் வாங்குபவர்கள் முழு பணத்தையும் கொடுக்கிறார்கள். ஆனால் அந்த பணம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை. இது குறித்து புகார் அளித்திருக்கிறோம். ஒரு சதுர அடியை 16 ரூபாய்க்கு வாங்கி ரூ.6 ஆயிரத்திற்கு பிளாட் போட்டு விற்பனை செய்கிறார்கள். இந்த விலைக்கு விற்கும் என்று ஆரோவில் பவுண்டேஷன் அதிகாரிகளுக்கும் தெரியும். 2023லிருந்து இது நடந்து வருகிறது,’’ என்றார்.

* பாஜ, ஆர்எஸ்எஸ் சொல்லி செய்தார்களா?
விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர் பியூஷ்மனுஷ் கூறுகையில், ‘‘ஆரோவில் பவுண்டேஷன் ஒரு பெரிய தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. 5 ஆண்டுகளில் பல ஊழல்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது. அதில் இருக்கிற ஒரு ஊழலை எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக ஆர்.என் ரவி, ஜெயந்தி இருவரும் ஆர்.எஸ்.எஸ் சொல்லி செய்கிறார்களா, பாஜ சொல்லி செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக ஆணவங்களில் ஊழல் செய்திருக்கிறார்கள்.

ஆர்.என்.ரவி, குஜராத் மாநில கேடரை சேர்ந்த ஜெயந்தி ஐஏஎஸ் மீதும் புகார் கொடுத்திருக்கிறோம். இவர்கள் மீது வழக்கு எடுக்கவேண்டும். எஸ்பியிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறோம். நியாயம் கிடைக்கும்வரை இந்த போராட்டத்ைத கையில் எடுப்போம். தமிழக அரசுக்கும் இதில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. எஸ்பி விசாரணை நடத்தி 6 நாளில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடைபெறும்,’’ என்றார்.

* குறைந்த விலைக்கு அதிமுக பிரமுகருக்கு விற்றுவிட்டார்கள்
ஆரோவில் நிலம் விற்பனை குறித்து புகார்தாரர்கள் கூறுகையில், ‘‘தற்போது 16 ஏக்கர் நிலம் விற்பனையில் அதிமுகவை சேர்ந்த ஒருவருக்கு 10 ஏக்கரும், மற்றொருவருக்கு 3.5 ஏக்கரும், இன்னொருவருக்கு 2.5 ஏக்கரும் விற்பனை செய்துள்ளனர். இதற்கு பதிலாக அவர்கள் குறைந்த மதிப்புள்ள நிலத்தை கொடுத்துள்ளனர். ஒருவர் 30 சென்ட், அதில் கட்டுமானம் உள்ளதாக மதிப்பீடு காட்டி கொடுத்துள்ளார். ஆனால் இவர்கள் பெற்றுள்ளது பல கோடி மதிப்புள்ள நிலம்’’ என்றனர்.

Tags : Auroville ,Governor ,R.N. Ravi ,Villupuram SP ,Villupuram ,Villupuram district ,Auroville Foundation ,Auroville International City ,
× RELATED சமையல் காஸ் தட்டுப்பாடு தீவிரமாகிறது;...