×

தொடர்ந்து 6வது நாளாக நீடித்து வரும் ஈரான் மீதான போருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு: டிரம்பின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான மசோதா தோல்வியால் போர் நீடிக்கும் அபாயம்

 

வாஷிங்டன்: ஈரான் மீதான போர் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரங்களைக்கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் ஈரான் போர் விவகாரத்தில் டிரம்பால் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும். இதனால் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கடந்த 28ம் தேதி ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் நீடித்து வருகிறது. தாக்குதலின் முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. டெஹ்ரான் வானில் போர் விமானங்கள் தொடர்ந்து பறந்தபடி இருந்தன.

இஸ்ரேலின் எப்-35 விமானம் ஈரானின் யாக்-130 போர் விமானத்தை வானில் இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. மேலும், ஈரானின் ஆயுத கிடங்குகளையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கி அழித்த வீடியோவையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. பதிலுக்கு, ஈரான், பக்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதே போல, சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிலையமான ராஸ் தனுரா மீது 2வது முறையாக ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த 5 நாள் போரில் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்த மோதல் 6வது நாளாக தொடர்கிறது. இந்த தொடர் தாக்குதலால் மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் மசோதாவை, அமெரிக்க செனட் சபை நேற்று நிராகரித்தது. மத்திய கிழக்கில் வேகமாக பரவி வரும் இந்த மோதலுக்கு ஒரு தெளிவான முடிவை இதுவரை தெரியவில்லை. அப்படி இருந்தாலும் கூட ஆளும் குடியரசு கட்சியினர் முழுக்க முழுக்க டிரம்பிற்கு பின்னால் இருப்பதை இது காட்டுகிறது. “போர் அதிகாரங்கள் தீர்மானம்” என அறியப்பட்ட இந்த மசோதா, 47-க்கு 53 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நமது நாட்டை போல எம்பிக்கள் அனைவரும் கொறடா உத்தரவை பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என்ற விதி அமெரிக்காவில் இல்லை. எம்பிக்கள், தங்கள் விருப்பம் போல வாக்களிக்கலாம். அப்படி இருந்தும் இந்த மசோதா தோல்வி அடைந்துள்ளது, ஆளும் குடியரசு கட்சியினர் முழுக்க முழுக்க டிரம்பிற்கு பின்னால் நிற்பது தெளிவாகிறது. இந்த தீர்மானத்தின்படி ஈரான் மோதலை 60 நாட்களுக்கு மேல் தொடர வேண்டும் என்றால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டியது கட்டாயம். எதிர்கால தாக்குதல்களுக்கு முன்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கட்டாயமாக்கும் அதிகாரத்தை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும்.

இருப்பினும், அந்த மசோதாதான் இப்போது தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் அதிபர் டிரம்பிற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கிறது. ஈரான் விவகாரத்தில் டிரம்பால் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும். இது ஒருபுறம் இருக்கும் சூழலில் அமெரிக்க வெளியுறவு துறைக்குச் சொந்தமான விமானம் இப்போது மத்திய கிழக்கிற்கு புறப்பட்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்பதற்காக இந்த விமானம் மத்திய கிழக்கிற்கு சென்றுள்ளது. ஈரானுடனான போர் தீவிரமடைந்ததால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்கா, தனது குடிமக்களை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. இந்த சூழலில் தான் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம்
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது. இது முஸ்லிம் மதத்திற்கு ஒரு பெரிய இழப்பு என வாரியத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் எஸ்.கே.ஆர். இலியாஸ் கூறினார். மேலும், உடனடி மற்றும் பயனுள்ள ராஜதந்திர தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், இந்த மோதல் ஒரு பரந்த உலகளாவிய போராக விரிவடைய கூடும். உலக பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். வளரும் மற்றும் பலவீனமான நாடுகள் மிக பெரிய சுமையை சுமக்கும்’ என்றார்.

அதே நேரத்தில், அயத்துல்லா கமேனியின் தியாகம் குறித்து அதிகாரப்பூர்வ இரங்கல் செய்தி எதுவும் வெளியிடப்படாதது குறித்து இலியாஸ் கவலை தெரிவித்தார். இது நமது தார்மீக மற்றும் ராஜதந்திர மரபுகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார். இந்த போரை நிறுத்த உடனடி, தீவிரமான மற்றும் நடைமுறை நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டின் தலைமைக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேச சமூகத்திற்கும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறது. இல்லையெனில், இந்த நெருப்பு ஒரு பிராந்தியத்தில் மட்டும் இருக்காது. மேலும் எந்த நாடும் அதன் விளைவுகளால் பாதிக்கப்படாமல் இருக்காது.

பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாத தலைமை பதவி அமெரிக்காவிடம் உள்ளது. மரபுப்படி இந்த மாதத்துக்கான தற்காலிக பணி திட்டங்களை அமெரிக்க பிரதிநிதி வெளியிட்டார். இதில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் வகையில் 1737 தடை கமிட்டியின் செயல்பாடுகளும் அடங்கி இருந்தன. இதற்கு சீனா மற்றும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தன. தங்கள் வீட்டோ அதிகா ரத்தை பயன்படுத்தி அதை நிராகரித்தன. இதனால் அந்த பணித்திட்டம் ஏற்க முடியாமல் போனது. அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தற்காலிக வேலைத்திட்டத்தில் ஈரான் தொடர்பான 1737 தடைகள் குழுவின் பணிகள் குறித்த விளக்கமும் அடங்கியிருந்ததால், அதை நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டோம் என ரஷ்யா கூறியுள்ளது.

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: ஸ்பெயின்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, ஸ்பெயினில் உள்ள கூட்டு ராணுவத் தளங்களை ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க டிரம்ப், ‘எங்கள் பேச்சை கேட்காவிட்டால் ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை முற்றிலுமாக துண்டிப்போம்” என எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், “ஈரான் போர் என்பது லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடும் ‘ரஷ்யன் ரவுலட்’ (ஒரே ஒரு தோட்டா மட்டும் நிரப்பப்பட்டு துப்பாக்கியால் தலையில் சுட்டு விளையாடுவது) போன்ற ஆபத்தானது. வெறும் வர்த்தகப் பழிவாங்கல்களுக்கு பயந்து, உலகிற்கு கேடு விளைவிக்கும் செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம். இது எங்கள் கொள்கை மற்றும் நலன்களுக்கு எதிரானது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அவசர எச்சரிக்கை
இந்த போர் தொடர்பாக நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அதன் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: சிறிது நேரத்திற்கு முன்பு ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் ராணுவம் அடையாளம் கண்டுள்ளது. அச்சுறுத்தலை தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கடைசி சில நிமிடங்களில், ஹோம் ப்ரண்ட் கமாண்ட் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மொபைல் போன்களுக்கு நேரடியாக ஒரு பூர்வாங்க உத்தரவை பிறப்பித்தது. பொதுமக்கள் பொறுப்பேற்று அறிவுறுத்தல்களின்படி செயல்படுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். எச்சரிக்கையை பெற்றவுடன் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைந்து புதிய அறிவிப்பு வரும் வரை அவற்றில் இருக்க வேண்டும். வெளிப்படையான உத்தரவை பெற்ற பின்னரே பாதுகாக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும்.

அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவு?
இந்த போர் நடவடிக்கையின் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள செலவு விவரம் குறித்து அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. முதல் 24 மணி நேரத்தில் (பிப். 28ம் தேதி) ரூ.7 ஆயிரத்து 166 கோடி செலவிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன் விமானங்களை மாற்றி நிலைநிறுத்துதல், 12க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்களை பணியில் ஈடுபடுத்துதல், பிராந்திய ஆதாரங்களை இயக்குதல் ஆகியவற்றிற்கு கூடுதலாக ரூ.5,796 கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விமானம்தாங்கி கப்பலான ஜெரால்டு போர்ட்-ஐ இயக்குவதற்காக ஒருநாளுக்கு ரூ.60 கோடி செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரிய செலவு ஒன்றும் கிடையாது. அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.92 லட்சம் கோடி அளவில் உள்ளது. அதை ரூ.138 லட்சம் கோடி(1.5 டிரில்லியன்) ஆக உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

Tags : US Parliament ,Iran ,Trump ,Washington ,US ,Israel ,
× RELATED அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம்...