×

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதிகள் பராமரிப்பு பணிக்கான டெண்டரை தொடரலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் பராமரிப்பு பணிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் உள்ள அறைகள் பராமரிப்பு பணிகளுக்கு பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது. பிப்ரவரி 28ம் தேதி கோரப்பட்ட இ-டெண்டர் படிவங்களை சமர்ப்பிக்க இரண்டு நாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

டெண்டர் கோரி விண்ணப்பிக்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள், பொதுப்பணித் துறை செயற்பொறியாளரிடம் தள ஆய்வு சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. சான்று கோரி விண்ணப்பித்தும் சான்று வழங்காததால் டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரி ஒப்பந்ததாரர்கள் இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்களுக்கு தள ஆய்வு சான்று வழங்கப்பட்டு விட்டதாக அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெண்டர் நடவடிக்கைகளை தொடர அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags : Omandurar Government Estate ,Madras High Court ,Chennai ,Omandurar ,Government ,Estate ,
× RELATED போலிச்செய்திகளுக்கெதிரான...