×

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் – புனல் (1916)-ஐ தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் பொது மக்களை மையமாகக் கொண்ட நீர் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையத்தை – புனல் (1916)’ இன்று (4.03.2026) முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தால் நிறுவப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம், குடிநீர் தொடர்பான அனைத்து புகார்களையும் பதிவு செய்வதற்கான பொதுவான தளத்தை பொது மக்களுக்கு வழங்குகிறது. 24 மணி நேரமும் இயக்கப்படும் இத்தளம், குடிநீர் கிடைக்கும் தன்மை, நீரின் தரம் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் தொடர்பான ஒவ்வொரு புகாரும் விரைந்து கேட்கப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் 24 மணி நேரமும் தீர்க்கப்படுவதை உறுதி செய்கிறது.

‘புனல்’ மையம், குடிநீர் வழங்கும் பல்வேறு துறைகள் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (TWAD), நகராட்சி நிர்வாக இயக்குநரகம் (DMA) பேரூராட்சிகள் இயக்குநரகம் (DTP) மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆணையரகம் (CRD) ஆகியவற்றை ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் இணைக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் புகாரை ஒரே இடத்தில் பதிவு செய்யலாம்; அப்புகார் தானாகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் சென்றடைகிறது. இந்த ஒருங்கிணைந்த வழிமுறை, துறைகளுக்கிடையான தாமதங்களை கணிசமாகக் குறைத்து, விரைவான குறைதீர்ப்பை உறுதி செய்கிறது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரும் வகைப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட களப் பொறியாளர்கள் அல்லது அதிகாரிகளுக்கு இணையவழியாக அனுப்பி வைக்கப்படும். இந்த அமைப்பு, நிகழ்நேரக் கண்காணிப்பாக செயல்பட்டு, புகார்கள் உடனடியாகப் பதிவு செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், இறுதித் தீர்வு கிடைக்கும் வரை கண்காணிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது.

பொதுமக்கள் தங்கள் குடிநீர் தொடர்பான புகார்களை பின்வரும் நான்கு எளிய மற்றும் அணுகக்கூடிய வழிகளில் பதிவு செய்யலாம்:

  • IVR / கட்டணமில்லா அழைப்பு: 1916 (24 மணி நேர சேவை)
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: punal.tn.gov.in (இணையவழி புகார் பதிவு மற்றும் கண்காணிப்புக்கு)
  • கைபேசி செயலி: புனல் சிட்டிசன் ஆப் (Play Store மற்றும் App Store-இல் கிடைக்கிறது)
  • வாட்ஸ்அப்: வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் புகார் பதிவு செய்ய “94 9999 1916” என்ற எண்ணிற்கு “Hi” என்று அனுப்பலாம்.

‘புனல்’ அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், மின்னணு நிர்வாகத்தில் திறம்பட்ட பொதுச் சேவையை உறுதி செய்து, பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை அனைவருக்கும் வழங்க தமிழ்நாடு அரசு தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu Integrated Drinking Water Depletion Centre ,Funal ,First Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Tamil ,Nadu Integrated Drinking Water Treatment Centre ,Tamil Nadu ,Tamil Nadu Drinking Water Supply and Drainage Board ,
× RELATED ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள...