ஊட்டி: ஊட்டியில் வெயிலின் தாக்கம் மற்றும் இரவில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நாள்தோறும் மலர் தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் கோடை சீசனின்போது ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள வந்துச் செல்கின்றனர். 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டு அதில் மலர்கள் பூத்து குலுங்கும்.
இந்த மலர் தொட்டிகள் பூங்கா மாடங்களில் பல்வேறு வடிவங்களில் அடுக்கப்பட்டிருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், புகைப்படும் எடுத்துக் கொள்வார்கள். மலர் கண்காட்சிக்கு இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில், தற்போது பூங்கா ஊழியர்கள் பராமரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஊட்டியில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் இரவு நேரங்களில் பனி காணப்படுகிறது. இதனால், மலர் நாற்றுகள் வாடாமல் இருக்க நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
