×

வைக்கோல் ஏற்றி வந்த வேனில் மின் கம்பி உரசி தீ விபத்து

ஈரோடு, பிப். 10: ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்துள்ள கனகபுரம் பகுதியில் நெல் அறுவடை முடிந்த பகுதியில் கால்நடை தீவனங்களுக்காக வைக்கோல்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், கனகபுரம் பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டியை சேர்ந்த காளியப்பன் (40), வைக்கோலை வாங்கி, சரக்கு வேனில் ஏற்றி தர்மபுரி நோக்கி புறப்பட்டார். வேனை அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார் (32) ஓட்டினார். வேன் சென்னிமலை ரோடு மாவட்ட பத்திர பதிவு அலுவலகம் அருகே சென்றபோது, அப்பகுதியில் இருந்த மின் கம்பி வைக்கோல் பாரத்தில் உரசி, தீப்பிடித்தது. இதையறியாமல் தொடர்ந்து வண்டியை ஓட்டிய செந்தில்குமார், சில அடி தூரம் சென்றதும், வேனில் இருந்து புகை வருவதை கண்டு ரோட்டின் ஓரமாக நிறுத்தினார்.

பின்னர், காளியப்பனும், செந்தில்குமாரும் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது, செந்தில்குமாருக்கு தீக்காயம் ஏற்பட்டது.  இது குறித்து தகவல் அறிந்து இரண்டு வாகனங்களில் ஈரோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வைக்கோலில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வைக்கோலை வேனில் இருந்து அப்புறப்படுத்தி சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீக்காயம் அடைந்த செந்தில்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து அதிகாரிகள் மெத்தனம்:  ஈரோடு மாவட்டத்தில் அதிக உயரத்திற்கு வைக்கோல் பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மின் கம்பி உரசி தீ விபத்தில் சிக்குன்றன. இதில், கடந்த மாதம் சாஸ்திரி நகர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த மினி சரக்கு லாரியில் தீ விபத்து ஏற்பட்டு லாரியும், வைக்கோலும் முற்றிலும் எரிந்து நாசமானது. அதேபோல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரக்கு வேனில் அதிக உயரத்திற்கு வைக்கோல் ஏற்றி வந்து பன்னீர் செல்வம் பார்க் அருகே விபத்தில் சிக்கின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் அதிக பாரம் ஏற்றும் வாகனங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இதனால், விபத்துகள் நடந்து வருகிறது. எனவே, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முறையாக வாகன தணிக்கை செய்து, அதிக உயரம் பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : fire ,
× RELATED தீ தடுப்பு தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்