×

குடிநீர் பிரச்னை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் மறியல்

கும்மிடிப்பூண்டி, மார்ச் 3: கும்மிடிப்பூண்டி அருகே குழிநாவல் கிராமத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குழிநாவல் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழிநாவல் பகுதி மக்கள் நேற்று முன்தினம் கள்ளூரில் இருந்து பாடிநெல்லூர் வரை இயக்கப்படும் அரசு பேருந்தை சிறை பிடித்து காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எளாவூர் ஊராட்சியில் இருந்து பைப் லைன் வழியாக வரும் குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Gummidipoondi ,Kuzhinaval village ,Kuzhinaval ,Opasamuthiram panchayat ,
× RELATED பங்குனி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளில்...