×

இரு நண்பர்கள்… இரு உணவகம்… ஒரு கூரைக்குள்!

நன்றி குங்குமம் தோழி

நண்பர்கள் இருவர் இணைந்து பிசினஸ் செய்ய விரும்பி கடந்த 13 வருடங்களாக ஒன்றாக பயணித்தாலும் தனித்தனி நிறுவனமாக செயல்பட்டு வந்துள்ளார்கள். கடந்த வருடம் இரு நிறுவனங்களை ஒன்றாக இணைத்து ஒரே நிறுவனம்… ஒரே பிசினஸ் என்று கைகோர்த்துள்ளனர். சென்னையை சேர்ந்த பாலாஜி மற்றும் கவுதம் இருவரும் நண்பர்கள். படித்தது கேட்டரிங். ஒன்றாக வேலை பார்த்த இடத்தில் நண்பர்களாக மாறினார்கள்.

பாலாஜி வெளிநாட்டிற்கு செல்ல, கவுதம் இத்தாலியன் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். பாலாஜி முழுக்க முழுக்க தென்னிந்திய உணவில் தன் திறமையை வளர்த்துக் கொள்ள… அவரை சென்னைக்கு வரவழைத்து தென்னிந்திய உணவகம் ஒன்றை ஆரம்பிக்க உற்சாகப்படுத்தினார் கவுதம். இன்று நண்பர்கள் ஒன்றாக செயல்படுவது போல் இவர்களின் உணவகமான சால்ட் மற்றும் டஸ்கானா சென்னை ெபருங்குடியில் உள்ள பிரிகேட் உலக வர்த்தக மையத்தில் ஒரே கூரையின் கீழ் இயங்கி வருகிறது. இது குறித்து பேசத் துவங்கினார் சால்ட் உணவகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் பாலாஜி.

‘‘நானும் கவுதமும் இணைந்துதான் 2013ல் சென்னையில் சால்ட்டினை துவங்கினோம். அதன் பிறகு பெங்களூர், பூனே, ஐதராபாத்தில் எங்களின் கிளைகள் உள்ளன. தற்போது சென்னை, பெருங்குடியில் எங்களின் இரண்டாவது கிளையினை திறந்திருக்கிறோம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். கேட்டரிங் குறித்த பட்டப் படிப்பு முடித்த பிறகு நானும் கவுதமும் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தோம்.

அங்கிருந்துதான் எங்களின் நட்பு பயணம் துவங்கியது. நான் பத்து வருடம் நட்சத்திர ஓட்டலில் முழுக்க முழுக்க தென்னிந்திய உணவகத்தில் வேலை பார்த்ததால், தென்னிந்திய உணவுகள் அனைத்திலும் தனிப்பட்ட அனுபவங்களை வளர்த்துக் கொண்டேன். அதன் பிறகு லண்டனில் உள்ள மிசிலேன் ஸ்டார் செஃப் அதுல் கோச்சர் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு வட இந்திய உணவுகளை கற்றுக்கொண்டேன்.

அந்த சமயத்தில் கவுதம் சென்னையில் டஸ்கானா என்ற பெயரில் இத்தாலியன் உணவகத்தினை நிறுவி நிர்வகித்து வந்தார். அவர் என்னை சென்னைக்கு வந்துவிடுமாறு கூறினார். மேலும், தென்னிந்திய உணவகம் ஒன்றை இருவரும் சேர்ந்து துவங்கலாம் என்றார். அவர் ஏற்கனவே உணவகம் அமைத்த அனுபவம் இருந்ததால், சரி என்று சொல்லி சென்னைக்கு வந்தேன். சால்ட் உணவகம் சென்னையில் மட்டுமில்லாமல் மற்ற மெட்ரோ நகரங்களிலும் வெற்றிகரமாக செயல்பட ஆரம்பித்தது. இதுநாள் வரை இரு நிறுவனத்தின் கீழ் எங்களின் உணவகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது அதனை நாங்க ஒரே நிறுவனத்தின் கீழ் அமைத்துள்ளோம். சால்ட் உருவாக முழுக்க முழுக்க கவுதம்தான் காரணம்.

‘‘நாங்க இருவரும் வேறு வேறு திசையை நோக்கி பயணித்தாலும், ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்தான் இருந்தோம். 2003ல் கவுதம் டஸ்கானா இத்தாலியன் உணவகத்தினை பெங்களூரில் துவங்கினார். அப்ேபாதிலிருந்தே அவர் என்னையும் தனியாக ஒரு உணவகம் அமைக்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். நான் மறுத்து வந்ததால், அவர் நேரடியாக லண்டன் வந்து என்னையும் என் மனைவியையும் சந்தித்து இது குறித்து பேசினார்.

அதன் பிறகுதான் சால்ட் உருவானது. என்னுடைய உணவகத்திற்கான பெயரையும் அவர்தான் தேர்வு செய்தார். இந்திய உணவகம் என்றாலும், எல்லோருடைய மனதிலும் பளிச்சென்று பதியுமாறு ஒரு பெயர் வைக்க விரும்பினோம். உணவுப் பொறுத்தவரை உப்பு மிகவும் அவசியம். கூடினாலும் குறைந்தாலும் உணவினை சுவைக்க முடியாது. உப்பு உலகளவில் மிகவும் முக்கியான பொருள் என்பதால் அதையே எங்களின் உணவகத்தின் பெயராக வைத்தோம்.

இன்று பல உணவகங்கள் வந்துவிட்டன. போட்டிகள் நிறைந்த துறையில் நாம் எவ்வாறு பயணிக்கிறோம் என்பது தான் முக்கியம். அதன் அடிப்படையில் நாங்க உணவகத்தை ஆரம்பித்த போதே முடிவு செய்துவிட்டோம், நாங்க அடிப்படையில் செஃப் என்பதால், எங்களின் உணவகமும் செஃப்பின் தலைமையில் தான் செயல்பட வேண்டும் என்று.

இங்குள்ள பெரும்பாலான உணவகங்கள் செஃப் தலைமையில் இயங்குவதில்லை. அதே போல் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவினை தயார் செய்து தர முடியும். மேலும், அதிக எண்ணெய் இல்லாமல் அதே சமயம் உடலுக்கு தீங்கு விளைக்காமல் உணவினை சமைத்துக் கொடுக்க முடிவு செய்தோம். பான் இந்திய உணவுகளை சுவையாகவும் உடலினை பாதிக்காமலும் கொடுக்க திட்டமிட்டோம். எங்களின் உணவில் அதிகளவு ப்யூஷனினை நாங்க உபயோகிப்பது இல்லை. இங்கு பரிமாறப்படும் அனைத்து இந்திய உணவுகளும் சுவாரஸ்யமாக தயாரிக்கப்படுகின்றன என்பதை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைத்தோம். அதே சமயம் பாரம்பரிய உணவினை நாங்க அதன் செய்முறையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்’’ என்றவர் ஆரம்பத்தில் பல சவால்களை சந்தித்துள்ளார்.

‘‘சால்ட் தற்போது 10 கிளைகளில் இயங்கி வருகிறது. பெங்களூர், சென்னை, பூனே, ஐதராபாத் என நான்கு நகரங்களில் இரு உணவகங்களும் இங்கு இணைந்திருப்பது போல் செயல்படுத்தும் எண்ணம் உள்ளது. அடுத்து கோவை, சண்டிகர் என இரண்டாம் நிலை நகரங்களிலும் கிளைகளை திறக்கும் திட்டம் உள்ளது. ஆனால், அதில் சில சவால்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக உணவகத்தில் பணியாற்றுபவர்கள்.

இங்கு நன்கு தேர்ச்சிப் பெற்று, அடுத்து வேறு இடத்திற்கு மாறுவார்கள். அவர்களின் இடத்திற்கு மற்றொருவரை நியமித்து அவர் இந்த இடத்திற்கு ஏற்ப பயிற்சி பெறும் வரை காத்திருக்க வேண்டும். இது போன்ற சவால்களை எல்லாம் கடந்துதான் எங்களின் இரண்டு பிராண்ட் உணவகங்களும் இணைந்து 30 கிளைகளில் செயல்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் அதனை 50 ஆக உயர்த்தும் திட்டத்தில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறோம்’’ என்றவர், இங்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து விளக்கினார்.

‘‘சால்ட் முழுக்க முழுக்க இந்திய உணவுகளை வழங்கும் உணவகம். டஸ்கானாவில் இத்தாலியன் உணவுகள் கிடைக்கும். ஒரே கூரைக்கு அடியில் செயல்பட்டு வந்தாலும் இரண்டும் தனித்தனி உணவகங்களாகத் தான் இயங்கும். அதாவது, நீங்க இந்திய உணவுகளை ஆர்டர் செய்தால் அதனை சால்ட்டில் இருந்து பரிமாறுவோம். அதே போல் இத்தாலியன் உணவுக்கு டஸ்கானாவின் தனி மெனுவில் ஆர்டர் செய்யலாம்.

அலபி ஃபிஷ் கறி, கேரளா மட்டன் ரோஸ்ட், கலோட்டி கபாப், பட்டர் சிக்கன், சார்கோல் சிக்கன் டிக்கா என தென்னிந்திய வட இந்திய உணவுகளுடன் பாஸ்தா, பீட்சா என இத்தாலிய உணவுகள் பரிமாறுகிறோம். நாங்க இருவருமே செஃப் என்பதால் இங்கு பரிமாறப்படும் மாக்டெயில்கள், மசாலாப் பொருட்கள், பீட்சா, பாஸ்தா மாவு என அனைத்தும் நாங்களே தயாரிக்கிறோம். அதனால் உணவினை ஃப்ரெஷ்ஷாகவும் தரமாகவும் கொடுக்க முடிகிறது’’ என்கிறார் பாலாஜி பாலசந்தர்.

செய்தி: ஷம்ரிதி

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

Tags : Kungumam ,
× RELATED வீட்டிலிருந்தே மாற்றத்தை உருவாக்க முடியும்!