நன்றி குங்குமம் தோழி
‘‘சென்னை, கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நேரத்தில் நிவாரண உதவிகள் வழங்கி இருக்கிறோம். முதியோர் இல்லங்களுக்கு மளிகை சாமான்கள், மலைவாழ் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், ஆடை வழங்கி வருகிறோம். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு காசோலை, தெருவோரங்களில் யாசகம் பெறுபவர்களுக்கு மதிய உணவு போன்ற எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்’’ என்கிறார், கோவை சாய்பாபா காலனியில் வசிக்கும் நேர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுதாதேவி.
கோவை காரமடையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 1998ம் ஆண்டில் படித்த +1 மற்றும் +2 மாணவர்கள் எல்லோரும் ஒருநாள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம். 2015ல் அக்டோபர் 2ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தனியார் அரங்கில் எங்களின் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது நண்பர் ஒருவர் தனது கல்லூரி நாட்களில் நாட்டு நலப்பணித் திட்டம், சமூக சேவை குறித்த நிகழ்வுகளைப் பற்றி பேசினார். அந்தப் பணியினை நாம் அனைவரும் இணைந்து ஓர் அமைப்பாக அரசு அனுமதியுடன் தொடங்க முடிவு செய்தோம். அப்படி உருவாக்கப்பட்டதுதான் NERCHI (நேர்ச்சி) நண்பர்களின் அன்பு அறக்கட்டளை. கைகளால் மட்டுமல்ல, இதயத்தாலும் சேவை செய்வதுதான் எங்களுடைய அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும்.
தொடக்கக் காலகட்டத்தில் நிதி வசதி, மனித வள ஒத்துழைப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு குறைவாகத்தான் இருந்தது. ஆனால், அதனை நாங்கள் சவாலாக எடுத்துக் கொண்டு இணைந்து செயல்பட முயற்சி செய்தோம். நாளடைவில் எங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்தது. பலர் தானாகவே முன்வந்து தங்களின் ஆதரவை அளித்தார்கள். இதனால், எங்களுடைய சவால்களை கடக்க வசதியாக இருந்தது. ஒற்றுமையுடன் கூடிய, நேர்மையான செயல்பாடுகள். தெளிவான நோக்கங்களால் எங்களின் அமைப்பிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்துள்ளது’’ என்றவர் கல்வி, விளையாட்டு துறை சார்ந்தும் பல உதவிகளை செய்து வருகிறார்.
கல்வி, விளையாட்டு துறையில் மாணவர்களுக்கு நிதியுதவி, விளையாட்டு வீரர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான உபகரணங்கள், திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வினாடி-வினா, கட்டுரை, கவிதை போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறோம். எதிர்காலத்தில் கிராமப்புறங்களில் பாரம்பரிய விளையாட்டு, பெண்கள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து, இளைஞர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்க காத்திருக்கிறோம்.
எங்கள் அறக்கட்டளைக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பல வழிகளில் நிதி திரட்டப்படுகிறது. எங்க அறக்கட்டளையில் உள்ள அனைவரும் ஒவ்வொரு ஆண்டும், குறைந்தபட்ச நிலையான தொகையினை அளிக்கவும் செய்கிறோம். தேவை உள்ளவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்யும் போது, மனதிற்கு நிம்மதி தருகிறது. இதில் நான் மட்டுமில்லாமல் அமைப்பின் துணைத்தலைவர் ஷீலா, செயலர் ரூபா, இணைச் செயலர் லாவண்யா, பொருளாளர் சுஜாதா மற்ற உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்றாக செயல்படுவதால், ஒரு மாபெரும் சக்தியினை திரட்டி பலருக்கு உதவ முடிகிறது’’ என்றார் சுதாதேவி.
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்
