×

நான்கு சுவர்களுக்குள் நந்தவனம்!

நன்றி குங்குமம் தோழி

அனைத்திலும் அழகுக் கலை!

மனிதனின் அடிப்படை தேவைகள் மூன்று. உணவு, உடை, இருப்பிடம். இன்றைய காலகட்டம் அனைத்திலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பாட்டி ஆசையுடன் செய்து தந்த ஊத்தப்பம் ‘பீட்சா’வாக மாறியுள்ளது. மேற்கத்திய கலாச்சாரம் தலை தூக்கிய பின், பாரம்பரிய உணவுகளுக்கு பல்வேறு பதாகைகள் தேவைப்படுகிறது. ‘ருசி’ இருக்கிறதோ இல்லையோ, பார்த்தால் நாக்கில் நீர் ஊற வேண்டும். உடையை எடுத்துக் கொண்டால், ‘கிழிந்ததை அணியாதே’ என்று சொன்ன காலம் போய், கிழிந்து அணிவதிலும் அழகு இருப்பதாக அறியப்படுகிறது.இவையெல்லாம் ஒரு புறம் மாறினாலும், நம் இருப்பிடம் என்பது என்றும் மாறாமல் நாம் வசிக்கும் இடமாக அமைகிறது.

அதன் அழகு எல்லாவற்றையும் விட முக்கியமானது.சாப்பாடு, அணிய உடை இருந்தாலும், கடைசியில் நாம் அடைக்கலம் அடையும் இடம் வீடுதான். அங்குதான் நம் சுக-துக்கங்கள், நன்மை-தீமைகள், விருப்பு-வெறுப்புகள் அனைத்தும் கணிக்கப்படுகின்றன. ‘என் வீடு, என் இஷ்டம் போல் இருக்கலாம்’ என்கிற பாவனையை தரவேண்டும். நாள் முழுக்க உழைத்து, உடல் சோர்வுற்று, மனம் தளர்ந்து வீடு திரும்பும் போது, அவ்வீடு உங்களுக்கு மன அமைதியை தருவதாக இருக்க வேண்டும். ‘அப்பாடா’ என்று வீட்டிற்குள் நுழையும் போது, திரைச்சீலைகள் தூசியுடன் கிழிந்து தொங்க, பிள்ளைகள் விளையாடிய பொருட்களும், செய்தித்தாள்களும் இரைந்து கிடக்க, தொலைக்காட்சியோ, வானொலியோ அலறிக் கொண்டிருந்தால்… யோசித்துப் பாருங்கள்!

எத்தனை மணி நேரம் வேலை செய்தாலும், எங்கு சுற்றினாலும் கடைசியாக நாம் அடைக்கலம் புகும் இடம் வீடுதானே! அது கண்களுக்கு விருந்தாக, பார்ப்பதற்குக் குளிர்ச்சியாக அமைந்துவிட்டால் அதுதானே நமக்கு சொர்க்கம். அத்தகைய இல்லத்தை அழகாக மாற்றிக் கொள்வது என்பது ஒரு கலை. அதற்காக பெரிய பங்களா வீடாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வாடகை வீடாக இருந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சியையும், உடல் நலத்திற்கு ஆரோக்கியமாகவும் அமைந்துவிட்டாலே போதும். மேலும், நம் ரசனை மூலம் அழகற்ற ஒரு இடத்தைக் கூட மிக அழகாகக் காட்ட முடியும். தூய்மையான இடத்தைக் கண்டால், ‘எமன்’ கூட பயந்து ஓடுவான் என்பார்கள். அழகுணர்ச்சியோடு காணப்படும் இடம், நம் மனதை எப்போதும் ‘கூலாக’ வைக்க உதவும்.

நம்மிடம் உள்ள பொருட்களை சரியான இடத்தில், பொருத்தமாக சரிவர அமைத்தாலே போதும். அதைத்தான், ‘இன்டீரியர் டெக்ரேஷன்’ என்கிறார்கள். 25 வருடங்களுக்கு முன்பு வசதி படைத்தவர்கள் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்தது. இன்று அனைவரும் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டுள்ளனர். ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அலங்காரமாக இருக்கும் வீட்டைப் பார்த்தால் மகிழ்ச்சி தானாக ஊற்றெடுக்கும்.

பொதுவாகவே, தொட்டியில் ஓடும் மீன்களை சிலமணி நேரம் பார்த்தாலே நம் ரத்த அழுத்தம் சீராகும். கொட்டும் அருவியை பார்த்துக் கொண்டிருந்தாலும் மனது ஈர்க்கப்படும். அழகான, ஆரோக்கியமான ஒரு இருப்பிடம் நம் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். ஒரு இருப்பிடம் அல்லது வீட்டின் சூழல் பொறுத்து நம் மனநிலையும் அமைகிறது. விலைஉயர்ந்த பொருட்கள் மட்டும் அழகாகி விடாது. பல சமயங்களில் விலை குறைவான பொருட்கள் கூட நிறைவான அழகை தந்து இடத்தை சோபிக்கும். உதாரணத்திற்கு, விலையுயர்ந்த ‘சோபா செட்’ பொருந்தாத இடத்தில் நான்கு நாற்காலிகள் அந்த இடத்தையே அழகாக மாற்றிவிடும். எந்தெந்த இடத்திற்கு எதைச் செய்தால் பொருத்தமாக காணப்படுமோ, அதற்குத் தகுந்தவற்றை மட்டும் செய்தாலே திருப்தி கிடைக்கும்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் அடுக்குமாடி கட்டடங்களில் வசிக்கின்றனர். வேண்டிய அனைத்து வசதிகளுடன், அழகையும் பார்க்க வேண்டியுள்ளது. முதலில் நமக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் சரியான படி அமைக்கப்பட்ட பின், அதன் அலங்காரத்திற்கு முக்கியத்துவம் தரலாம். அழகை மட்டும் பார்த்து வியந்து போய் அமைத்துவிட்டோமானால், அவை உறுதித் தன்மையற்றதாகி விடும். வீடு கட்டும் பொழுது, அலமாரிகள், பொருட்கள் அடுக்குமிடம், துணிகள் வைக்க தனி இடம், படிக்க, படுக்க என ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற வசதிகளை அமைக்கிறோம். அத்தகைய வீட்டு உள் அலங்காரங்களைத்தான் ‘இன்டீரியர் டெக்ரேஷன்’ என்கிறோம். அவரவர் வசதிகள் பொறுத்து, ‘பட்ெஜட்’ பார்த்து செய்யப்படுகிறது.

ஒவ்வொன்றையும் ரசிக்கக் கற்றுக் கொண்டால் ‘கிரியேட்டிவிட்டி’ தானாக வந்துவிடும். அலங்காரச் செடியின் அடியில் மண் படாதவாறு தட்டு வைத்திருப்போம். அதை அழகாக மாற்ற வீட்டில் பயன்படாத பித்தளை பாத்திரங்களை துலக்கி பாலீஷ் செய்து அதற்குள் செடியை வைத்தால் அலங்காரமாகி விடும். அழகியல் அடிப்படையில், வீட்டிற்கு வருபவரை உபசரிக்கும் விதம் வரவேற்பறை, வேலைகள் செய்ய ஆர்வம் தூண்டக்கூடிய வகையில் சமையலறை, படிக்கும் அறை, பூஜை அறை, படுக்கும் அறை போன்றவை அமைப்பதோடு நில்லாமல் ஒவ்வொரு இடத்திற்கேற்ற நிறங்கள், விளக்குகள், தரை அமைப்பு, சுவர் அலங்காரம் என நிறைய பகுதிகளை நாம் ஆராய்ந்துதான் செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு அறையின் அழகை தீர்மானிக்கும் முன் இருவருக்கும் அவரவர் வசதிக்கான தேவைகளை குறித்துக் கொண்டு, அதற்கான அமைப்பைத் தரலாம். உதாரணத்திற்கு, சமையல் செய்பவர்களின் உயரத்தை கவனத்தில் கொண்டு சமையல் மேடையை அமைக்கலாம். அதேபோல் பராமரிப்பிற்கு ஏற்றாற்போல் அமைப்பதும் சிறந்தது. உதாரணத்திற்கு, அதிக வேலைப்பாடு கொண்ட ஜன்னல் சமையலறையில் அடுப்பு வைக்கும் இடத்திற்குப் பின்புறம் இருந்தால், அதனை பராமரிப்பது கஷ்டம்.

அங்கு கம்பிகள் கொண்ட ஜன்னல் இருந்தால் சுத்தம் செய்வது சுலபம். ஒவ்வொரு அலங்காரம் செய்யும் பொழுதும் அதன் பராமரிப்பை கருத்தில் கொண்டு அமைப்பது நல்லது. அலங்கரிப்பது அழகுதான் என்றாலும், நன்கு பராமரித்தால்தான் என்றும் அழகு.தூய்மையும் ஆரோக்கியமும் கருத்தில் கொண்டு அமைக்கப்படும் இடம் கண்டிப்பாக அழகாகத்தான் இருக்கும். ‘இன்டீரியர் டெக்ரேஷன்’ என்கிற பெயரில், நிறைய பணம் செலவழித்து வீடு முழுவதையும் அடைத்துவிட்டால் அது அழகாகாது.

இருக்கும் இருப்பிடத்திற்கு பொருத்தமானவற்றை மட்டும் செய்தாலே போதுமானது. குடிசையில் இருப்பவர்கள் வீட்டை அழகுற துடைத்து, கோலமிட்டு, பசுமையான செடிகளை வாயிற்படிகளில் வைக்கலாம். பண்டைய காலங்களில் ‘இன்டீரியர் டெக்ரேஷன்’ முறை இல்லாத போது வீடுகளில் இயற்கை அழகு காணப்பட்டது. மனிதன் தன் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப அறைகளை அமைத்தார்கள். ஒவ்வொரு இடத்திற்கும் தேவையான அலமாரிகள், மர வேலைப்பாடுகள் செய்யப்பட்டன.

விஞ்ஞானம் வளரவும், நாகரீகம் மாறவும் அனைத்து அமைப்புகளிலும் மாறுதல் ஏற்பட்டன. கூடம், தாழ்வாரம் என்றும் வீட்டிற்குள்ளேயே முற்றம் என்றும் காணப்பட்ட இடங்கள் உருமாறிவிட்டன. எது எப்படியானாலும் “ஊருடன் சேர்ந்து வாழ்” என்பதற்கேற்றபடி, இன்றைய காலகட்டத்தில் நாம் நம் இருப்பிடத்தை அமைத்துக் கொள்வோம்.

மொத்தத்தில் வீட்டை அழகாக வைத்துக்கொள்வது என்பது ஒரு கலை. வீட்டுக்குள் நுழைந்தவுடன் மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும், பாதுகாப்பையும் தரும் ஆலயம் போல் வீடு விளங்கினால், கவலைகள் பறந்து போகும். வீட்டின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் சுகாதாரத்தோடு அமைத்தல் சிறப்பாகும். வீட்டின் வெளிப்புறம் பசுமையுடன் காணப்பட்டால், வீட்டில் ஆரோக்கியம் நிலவும். இப்படியான இல்லத்திற்கான அழகியலை ஆராய்வோம்.

தொகுப்பு:  சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

Tags :
× RELATED இரு நண்பர்கள்… இரு உணவகம்… ஒரு கூரைக்குள்!