- டிரம்ப்
- இஸ்ரேல்
- சவூதி அரேபியா
- பஹ்ரைன்
- ஈரானிய புரட்சிகர காவல்படை
- எங்களுக்கு
- வாஷிங்டன்
- ஈரானின் புரட்சிகர காவல்படை
- ஜனாதிபதி
- ஈரான்
- பரம முதல்வர்
- ஆயத்துல்லா அலி காமெனி...
வாஷிங்டன்: ஈரானின் புரட்சிப்படை தலைமையகத்தை அமெரிக்க ராணுவம் அதிரடியாக தாக்கி அழித்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேல், பஹ்ரைன் போன்ற நட்பு நாடுகளுடன் தற்போதைய போர் சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகளால் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 47 ஆண்டுகால வரலாற்றில் சுமார் 1,000 பேருக்கும் அதிகமான அமெரிக்கர்களின் மரணத்திற்கு ஈரானிய புரட்சிப்படை காரணமாக இருந்துள்ளதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது. இந்த சூழலில், இஸ்ரேல் ராணுவம் அந்நாட்டின் உளவுத்துறை தலைமையகம், விமானப்படை கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய ராணுவ நிலைகளை குறிவைத்து திட்டமிடல் அடிப்படையில் தொடர் தாக்குதல்களை நடத்தி ஈரானின் அதிகார அமைப்பை நேற்று பலவீனப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, இன்று ஈரானிய புரட்சிப்படையின் தலைமையகத்தை அமெரிக்க ராணுவம் முற்றிலும் அழித்துள்ளதாக அதன் ‘சென்ட்காம்’ அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 47 ஆண்டுகளில் 1,000 அமெரிக்கர்களை கொன்ற ஈரானிய புரட்சிப்படையின் தலைமையகம் தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ள அமெரிக்கா, நேற்று நடத்திய பிரம்மாண்ட தாக்குதல் மூலம் அந்த ‘பாம்பின் தலையை’ கொய்துள்ளது. இனிமேல் அந்த படைக்கு தலைமையகம் என்ற ஒன்று கிடையாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு டெஹ்ரான் நகரின் இதயப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தரப்பில் வளைகுடா நாடுகள், துபாய் மற்றும் சவுதி அரேபியா மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கிடையில், ஈரானை நிர்வகிக்க அலிரேசா அராபி (66) தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு நியமித்துள்ளது.
இந்த சூழலில் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பேசி தற்போதைய ராணுவ நிலவரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். ஈரானின் தாக்குதல் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, பிப்ரவரி 28ம் தேதி முதல் இதுவரை 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 541 ஈரானிய ட்ரோன்களைத் தங்கள் நாட்டு பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். இந்தச் சூழலில் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘ஈரான் மக்கள் நீதியைப் பெற்றுள்ளனர்; எங்களது அமைதி என்ற இலக்கை அடையும் வரை இந்தத் துல்லியமான குண்டுவீச்சு தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
