*கிராம மக்கள் பாராட்டு
தஞ்சாவூர் : திருவோணம் வட்டாரத்தில் ராவே திட்ட பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
திருவோணம் வட்டாரத்தில், வேளாண் மாணவிகளின் ஸ்ரீகிரியா ரூபிணி, சுவேதா, ஸ்வாதி பெடோனா, வைஷ்ணவி, வஜிகா, வாணிஸ்ரீ, வர்ஷா, வெனிஸ்மா இன்பன்ட், வித்யதர்ஷினி, யாழினி ஆகியோர் ராவே திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு, விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிராமிய கண்காட்சி மற்றும் நிறைவு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ராவே திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமங்களில் தங்கி விவசாய பணிகளில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களுக்குத் துணை நின்ற விவசாயிகளுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தனர்.
பயிர்சாகுபடி, மண் பரிசோதனை, விதைத் தேர்வு, பயிர் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் பெற்ற அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்துகொண்டனர். விழாவின் முக்கிய அம்சமாக கிராமிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டல் பொருட்கள், உயிர் உரங்கள், பூச்சி மேலாண்மை முறைகள் மற்றும் விவசாய உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை பார்வையிட்ட விவசாயிகள், மாணவர்களின் முயற்சிகளை பாராட்டி, இத்தகைய திட்டங்கள் கிராமப்புற வேளாண் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில், விவசாயிகள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, எதிர்காலத்தில் வேளாண் துறையில் சிறந்த பங்களிப்பு வழங்க வேண்டும் என வாழ்த்தினர். ராவே திட்டம் வேளாண் மாணவிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையேநல்ல புரிதலும் உறவுமுறையும் உருவாக்கியதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
