புதுச்சேரி : புதுச்சேரியில் குளிர்காலம் முடிவடைந்து படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது. தற்போது சராசரியாக 90 டிகிரி வெயில் சுட்டெரித்து வருகிறது. வரும் நாட்களில் வறண்டை வானிலையே நிலவும் என தெரிகிறது.
வெயில் வறுத்தெடுக்க தொடங்கி விட்டதால் தர்பூசணி, இளநீர், பழங்கள், மோர், வெள்ளரி விற்பனை சூடுபிடித்து வருகிறது. தர்பூசணி கிலோ ரூ.15 முதல் ரூ.20க்கும், இளநீர் ரூ.35 முதல் ரூ.50 வரைக்கும் விற்கப்படுகிறது. இளநீருக்கு கிராக்கி அதிகம் ஏற்பட்டுள்ளதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை புதுச்சேரி கடற்கரையில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பகற்பொழிதில் வெயிலின் தாக்கத்தில் அவதிப்பட்ட மக்கள், இதமான கடற்கரை குளிர்ந்த காற்றை அனுபவித்தனர். கடல் அலையும் சீற்றமின்றி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் பலரும் கடற்கரையில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
