×

ஏடிஎம் மையம் அமைக்கப்படுமா?

தூத்துக்குடி, மார்ச் 2: தூத்துக்குடி புதுப்பிக்கப்பட்ட பழைய அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் ஏடிஎம் மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழைய அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மினி பஸ்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரையில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக மினி பஸ்களில் உள்ளூர் பகுதிகளில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், நெல்லை, தென்காசி, திருச்செந்தூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் தினமும் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அடிப்படை வசதிகள், புறக்காவல் நிலையம், 2 அடுக்கு வாகன காப்பகம், தனியார் சிற்றுண்டி சாலைகள், கடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இங்கு வரும் பயணிகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

பல்வேறு பஸ்களில் தற்போது டிக்கெட்கள் பெறுவதற்கு பஸ்களில் வசதியாக யுபிஐ வசதிகளும் உள்ளன. இருப்பினும் பல பஸ்களில் இந்த வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. இந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் பயன்படும் விதமாக ஏடிஎம் மையங்கள் என்று எதுவும் இல்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் பணம் எடுக்க இங்கிருந்து குரூஸ் பர்னாந்து சிலை, மார்க்கெட் சிக்னல், ஜெயராஜ் ரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நெல்லை, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் பயன்பாட்டிற்காக ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தூத்துக்குடி புதுப்பிக்கப்பட்ட அண்ணா பஸ் நிலையத்திற்குள்ளும் வங்கிகளின் சார்பில் பயணிகள் வசதிக்காக ஏடிஎம் மையங்கள் அமைக்க வேண்டுமென பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Tuticorin ,Anna bus station ,Thoothukudi ,Anna bus ,station ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்