வாஷிங்டன்: டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இதுவரை 7 நாடுகள் மீது நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்த அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் பதவியேற்றது முதல் உலக அளவில் பல்வேறு அதிரடி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். இதற்கு முன்பு பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் சிறிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அவரது நிர்வாகம் முக்கிய போர் நடவடிக்கைகள் என்ற பெயரில் வான்வழி மற்றும் நேரடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு ஆசியா முதல் தென் அமெரிக்கா வரையிலான பகுதிகளில் அமெரிக்கப் படைகள் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி நேற்று ஈரான் நாட்டின் அணுசக்தி மையங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் மிகப்பெரிய கூட்டு வான்வழித் தாக்குதலை நடத்தின. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 3ம் தேதி வெனிசுலா நாட்டில் ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபரைக் கைது செய்தன. இதேபோல் 2025ம் ஆண்டில் மட்டும் சோமாலியாவில் 111 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏமன் நாட்டில் 2025ம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் ரஃப் ரைடர்’ என்ற பெயரில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் சிரியாவில் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் ஹாக் ஐ ஸ்டிரைக்’ நடத்தப்பட்டதோடு, ஈராக்கில் 2025ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி துல்லியமான வான்வழித் தாக்குதல் மூலம் முக்கிய தீவிரவாதத் தலைவன் ஒருவன் கொல்லப்பட்டான்.
நைஜீரியாவின் சோகோடோ மாகாணத்தில் நிலவும் தீவிரவாதத்தை ஒடுக்க 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது தவிர லத்தீன் அமெரிக்கப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சுமார் 45 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலம்பியா, கியூபா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் போர் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்காகத் தீவிரவாதக் குழுக்களை ஒடுக்குவதே இந்தத் திட்டமிடல் நோக்கம்’ என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அமெரிக்காவின் இந்தத் தொடர் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
