துபாய்: அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நேற்று முன்தினம் நடத்திய கூட்டு ராணுவ தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி, அவரது மகள், மருமகன், பேத்தியும் கொல்லப்பட்டனர். மேலும் ராணுவ அமைச்சர் அமீர் நசீர்ஸாதே, ராணுவ தலைமை தளபதி உட்பட 40 தலைவர்களும் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்றும் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இதில், அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஆப்ரகாம் லிங்கனை ஏவுகணை வீசி தாக்கியதாக ஈரான் அறிவித்தது. அதே நேரத்தில் இந்த போரில் 3 வீரர்கள் பலியாகிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது இருநாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும். இதனால் அணுஆயுதம் தயாரிப்பை நிறுத்துவதாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஓமன் நாட்டின் முயற்சியால் இரு நாடுகளுக்கும் இடையே ஜெனீவாவில் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலனளிக்கவில்லை. இதனால் அதிபர் டிரம்ப் ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். நேற்று முன்தினம் காலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் சேர்ந்து ஈரான் மீது கூட்டாக வான்தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படை தளங்கள், தொடர்பு உடைய பகுதிகள் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதலை நடத்தியது. இதையடுத்து அந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர்.
அமெரிக்காவும் இஸ்ரேல் நாடும் சேர்ந்து ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்தின. போர் விமானங்கள், போர்க்கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் மூலம் ஈரானில் ஒரே நாளில் மட்டும் 100 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் டெஹ்ரானில் உள்ள அரசு துறை அலுவலகங்கள் அனைத்தும் குறிவைத்து தகர்க்கப்பட்டது. இதுதவிர ஈரான் அதிபர் அலுவலகம், கமேனியின் அலுவலகம், அவரது இல்லம், அணுசக்தி திட்ட அமைப்பின் கட்டிடங்கள் தரைமட்டமாகின. டெஹ்ரானுக்கு அருகே உள்ள பள்ளி கட்டிடம், மினாப் என்ற இடத்தில் உள்ள பெண்கள் பள்ளியில் தாக்குதல்கள் நடந்தன. இதில், 148 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பதிலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபி, துபாய் போன்ற நகரங்களை குறி வைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் அபுதாபியில் ஒருவர் பலியானார். துபாயில் அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
அயதுல்லா கமேனி பலி: ஒரு பக்கம் தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார் என்று ரகசிய தகவல்கள் வந்துள்ளன என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார். ஆனால் அவர் பத்திரமாக உள்ளார் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், கமேனி கொல்லப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அவருடைய அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்கு பின் கமேனி அவரது மகள், மருமகன் மற்றும் பேத்தி கொல்லப்பட்டனர் என்று ஈரான் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் இதை கண்ணீர் விட்டு அழுதபடியே கூறினார். அதிரடி தாக்குதலில் ஈரான் ராணுவ அமைச்சர் அமீர் நசீர்ஸாதே, ராணுவ தளபதி அப்துல் ரஹீம் மூசாவி உட்பட 40 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் தெரிவித்தது. கொண்டாட்டம்-துக்கம்: ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தலைநகர் டெஹ்ரானின் ஆசாதி சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்ட மக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தும், வாகனங்களின் ஒலியை எழுப்பியும் இந்த நிகழ்வைக் கொண்டாடினர். குறிப்பாக, இளைஞர்கள் வீதிகளில் நடனமாடி தங்களது நீண்ட காலக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலையானதை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் கமேனி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடி துக்கம் அனுசரித்தனர்.
இந்த படுகொலையால் ஆத்திரமுற்ற ஈரான் பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி ஆகிய நாடுகளில் உள்ள இஸ்ரேல், அமெரிக்க படைகளின் நிலைகள் மீது நேற்று பயங்கர தாக்குதல் நடத்தியது. ஈரான் பல நுாற்றுக்கணக்கான ஏவுகணை வீசியது. டிரோன்களை ஏவியது. அதை ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழி்த்தது என்று இஸ்ரேல் தெரிவித்தது.
ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் 2வது நாளாக நேற்றும் தாக்குதலை தொடர்ந்து நடத்தின. டெஹ்ரானில் உள்ள பல இடங்களை குறி வைத்து இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்கின என்று இஸ்ரேல் அறிவித்தது.
யுஎஸ் கப்பல் மீது தாக்குதல்: வளைகுடாவில் சென்று கொண்டிருந்த அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆப்ரகாம் லிங்கன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வீரர்கள் மூவர் பலி: இந்த சூழ்நிலையில், அமெரிக்க போர் கப்பல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. ஆனால், ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் (ஆபரேஷன் எபிக் ப்யூரி) அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையை சேர்ந்த 3 வீரர்கள் பலியானதாக அமெரிக்கா நேற்று இரவு அறிவித்தது.
பல மாதங்களாக திட்டம்: ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு பல மாதங்களாக திட்டம் தயாரிக்கப்பட்டு வந்தது என்று இஸ்ரேலின் ராணுவ தளபதி இயால் ஸமீர் தெரிவித்தார்.முஸ்லிம்கள் நோன்பு இருக்கும் புனித ரமலான் மாதத்தில் இந்த தாக்குதலை இந்த நாடுகள் தொடங்கியுள்ளன.ஈரான் ராணுவத்தின் முக்கிய தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள்,ஏவுகணை, டிரோன் ஏவு தளங்கள் குறி வைத்து அழிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இஸ்ரேல் , அமெரிக்க படைகள் தாக்குதல்களில் ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நெஜாத் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வந்துள்ளன. அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கமேனி படுகொலைக்கு பழிவாங்கப்படும் என்று ஈரான் அமைச்சர் அறிவித்த நிலையில் இதற்கு முன்பு இருந்ததை விட மேலும் கடுமையான தாக்குதலை ஈரான் சந்திக்க வேண்டி வரும் என்றும் ஈரானின் அணு ஆயுதங்கள் அழிக்கப்படும் வரை ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
2வது நாளாக தாக்குதல் தொடருவதால் வளைகுடாவில் கடும் பதற்றம் நிலவுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் ஏவிய 167 ஏவுகணைகள்,
541 டிரோன்கள்: 3 பேர் பலி: இந்தியர் உட்பட 58 பேர் காயம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஈரானிய தாக்குதலின் இரண்டாவது நாளான ஞாயிறன்று காலை, 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 8 ஏவுகணைகள், 2 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 311 ட்ரோன்களை அழித்துள்ளோம். அதே நேரத்தில் 21 ட்ரோன்கள் பொதுமக்கள் இலக்குகளைத் தாக்கின.
ஈரானிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து, ஏவப்பட்ட 165 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 152 அழிக்கப்பட்டன, 13 கடலில் விழுந்தன, அத்துடன் 2 குரூஸ் ஏவுகணைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன, மேலும் 541 ஈரானிய டிரோன்கள் கண்டறியப்பட்டன, அவற்றில் 506 இடைமறித்து அழிக்கப்பட்டன, அதே நேரத்தில் 35 டிரோன்கள் நாட்டின் எல்லைக்குள் விழுந்து பொருள் சேதத்தை ஏற்படுத்தின, இதன் விளைவாக பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேச நாட்டினர் 3 பேர் கொல்லப்பட்டனர், மேலும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 58 பேர் காயம் அடைந்தனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் 8 பேர் பலி
இஸ்ரேலின் பெய்ட் ஷெம்ஷே நகர் உள்ளிட்ட இடங்களில் ஈரான் ஏவுகணைகள், டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 8 பேர் பலியானார்கள். இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை வீசியது. இதில் துபாய், அபுதாபி, தோஹா, மனாமா நகரங்களில் பயங்கர வெடிகுண்டு சத்தங்கள் கேட்டன என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஈராக்கிலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் தளங்கள் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
