×

மதுரையில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் தே.ஜ. கூட்டணி பிரசார கூட்ட அரங்கில் பெரியார் படம் அகற்றம்: கண்ணுக்கு முன் நடந்தும் அதிமுக மாஜி அமைச்சர்கள் ‘கப்சிப்’; பாஜ நடவடிக்கைக்கு பொதுமக்கள், கட்சியினர் கடும் கண்டனம்

மதுரை: மதுரையில் இன்று நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரக் கூட்ட அரங்க நுழைவாயில் முகப்பில் இருந்த தந்தை பெரியாரின் படம் பாஜவினரின் அழுத்தத்தால் அகற்றப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை மண்டேலா நகரில் இன்று மாலை நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். முன்னதாக மதுரை விமான நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த பிரதமர், இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்து சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் இன்று காலை 10.35 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு, 11.30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதை முடித்துக் கொண்டு 12.55 மணிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பும் பிரதமர், பகல் 1.55 மணிக்கு தஞ்சாவூர் விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து விமானப் படை விமானம் மூலம் 2 மணிக்கு புறப்பட்டு 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். மதுரை விமான நிலைய வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களை திறந்து வைக்கிறார். பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச் சாலை உள்ளிட்ட திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 3.40 மணிக்கு சாலை வழியாக திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்கிறார். 4.15 மணிக்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு சாலை வழியாக திரும்பும் பிரதமர் மோடி, மாலை 4.30 மணிக்கு மதுரை மண்டேலா நகரில் நடக்கும் தே.ஜ. கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். கூட்டத்தை முடித்துக் கொண்டு மாலை 6.10 மணிக்கு விமானப் படை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக அன்புமணி, டிடிவி.தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பொதுக்கூட்ட அரங்கினுள் செல்ல 3 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று பிற்பகல் தமிழ்நாடு பாஜ தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது, தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பாஜவினரிடம் உடனடியாக அகற்றுமாறு கூறினார். பியூஷ் கோயலுடன் அதிமுக மாஜி அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அங்கிருந்த நிலையில் பெரியாரின் உருவப்படத்தை அகற்றுமாறு கூறியதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து கூட்ட ஏற்பாட்டாளர்கள் நுழைவாயில் முகப்பில் இருந்து தந்தை பெரியாரின் உருவப்படத்தை அகற்றினர். தங்கள் கண்ணுக்கு முன்பே சம்பவம் நடந்தபோதும் அதிமுக மாஜி அமைச்சர்கள் கொஞ்சம் கூட அதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு, பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியாரின் படத்தை அகற்ற அனுமதித்த அதிமுக மாஜி அமைச்சர்கள் உடனடியாக நடந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். அதே இடத்தில் மீண்டும்பெரியாரின் படத்தை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

* பெரியாருக்கு பதில் தாமரை
தே.ஜ. கூட்டணி பிரசார அரங்க நுழைவாயிலில் பெரியார் படத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் பாஜவின் தேர்தல் சின்னமான தாமரை படத்தை பாஜ கட்சியினர் வைத்துள்ளனர்.

* பத்திரிகையாளர்களுக்கு திடீர் அனுமதி மறுப்பு
மதுரை விமான நிலையத்தில் இன்று பிற்பகல் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலில் புகைப்படக்காரர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி விபரம் சேகரிக்கப்பட்டது. திடீரென நேற்று பிற்பகலில் புகைப்படக்காரர்கள் உள்பட பத்திரிகையாளர்கள் யாருக்கும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டது. பிரதமர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : PM Modi ,Madura ,J. Pariyar ,MADURAI ,PERIYAR ,NATIONAL DEMOCRATIC ALLIANCE ,BAJAVINAR ,National Democratic Party ,Mandela city ,
× RELATED சொல்லிட்டாங்க…