- திமுக்
- அண்ணா ஞானம்
- சென்னை
- SDBI
- தாவா
- மஜக
- கோமதேகா கட்சி
- திமுகா
- காங்கிரஸ் கட்சி
- Komadeka
- தமிழ்நாடு சட்டமன்றம் தேர்தல்
சென்னை: திமுக காங்கிரஸ் கட்சியுடன் நேற்று முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தியது. தொடர்ந்து எஸ்டிபிஐ, தவாக, மஜக, கொமதேக கட்சியுடன் அடுத்தடுத்து நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக தலைவர்கள் கூறினர். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. கடந்த முறை கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதே கட்சிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன.
மேலும் மநீம, தேமுதிகவும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இப்படி அரசியல் களம் என்பது பரபரப்பாகி உள்ளது. அதே நேரத்தில் திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தரப்பில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கனிமொழி எம்பியை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது காங்கிரஸ் தலைமையின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பரபரப்பாக பேசப்பட்டது. தவெகவுடன் எந்தக் கட்சியும், ஏன் சிறிய கட்சிகள் கூட கூட்டணி அமைக்க முன்வரவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் வருவதாக கூறப்பட்டதால் பரபரப்பு எழுந்தது. ஆனால் காங்கிரசில் உள்ள எம்எல்ஏக்கள், பெரும்பாலான எம்பிக்கள், மூத்த தலைவர்கள் அனைவருமே திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமையை பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக பேச்சுவார்த்தை குழு அழைத்தது. தொடர்ந்து நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர் நிவேதித் அல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 4 பேர் அடங்கிய குழுவினருடன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.எஸ்.பாரதி ஆகிய 7 பேர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், ‘‘திமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கேட்டு இருக்கிறோம். அதை அவர்களும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். முதல்வருடன் கலந்து ஆலோசிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் நம்பிக்கையோடும் சென்று கொண்டிருக்கிறது. எத்தனை இடங்கள் என்பதை பத்திரிகையாளர்கள் முன்பாக சொல்ல முடியாது. கையெழுத்திடும் போது உங்களை வைத்து சொல்வோம்” என்றார்.
தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் தவாக தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டியில், ‘‘சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கூடுதல் இடங்களை தாருங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். நாங்கள் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 6 சட்டமன்ற தொகுதிகள் வேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருந்தோம். எங்களுடைய கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ் சமூகம் எதிர்நோக்கியிருக்கிற மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கையாக முன் வைத்திருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் நான் வலியுறுத்திய பல கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது’’ என்றார். அதன்பிறகு எஸ்டிபிஐ கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் அகில இந்திய துணை தலைவர் தெகலான் பாகவி, துணை தலைவர் அச.உமர் பாரூக், பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், ஏ.கே.கரீம், வர்த்தகர் அணி மாநில தலைவர் அமீர் ஹம்சா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
பின்னர் எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டியில், \\”3 தொகுதிகளை கேட்டு இருக்கிறோம். அவர்கள் தலைவருடன் பரிசீலித்து சொல்வதாக தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது. மகிழ்வானதாக இருந்தது. நம்பிக்கையாக இருந்தது. சின்னத்தை பொறுத்தவரை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவது என்ற தீர்மானத்தை தான் நாங்கள் எடுத்து இருக்கிறோம். இப்போது தொகுதி எண்ணிக்கை மட்டும் தான் பேசப்பட்டுள்ளது. நல்ல செய்தி வரும். ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து திமுக, மனிதநேய ஜனநாயக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அளித்த பேட்டியில்,”இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது என சொல்லி முடித்துவிடவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கான கோரிக்கை, விருப்பங்கள் சொன்னதும் அதனை புரிந்து கொண்டார்கள். விரைவில் நல்ல செய்தி தருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியுடன் நாங்கள் வந்துள்ளோம்” என்றார்.
திமுக, முக்குலத்தோர் புலிப்படை கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் கட்சியின் தலைவர் நடிகர் கருணாஸ் அளித்த பேட்டியில், \\”மீண்டும் திமுகவை ஆட்சியிலேற்ற உறுதியாக செயல்படுவேன். மகிழ்ச்சியாக அறிவாலயம் வந்தேன். மகிழ்ச்சியாக திரும்பி செல்கிறேன். ஆர்எஸ்எஸ்சுக்கும் எடப்பாடிக்கும் தமிழகத்தில் இடமில்லை. எனக்கான தொகுதி எண்ணிக்கை உறுதியாகிவிட்டது. அதனால்தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 234 தொகுதிகளில் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். என்னுடைய பலம் எனக்கு தெரியும்.
புதிதாகவும் நிறைய கட்சிகள் வந்திருக்கின்றன. அதனால் தொகுதிகளை விட தளபதியை மீண்டும் ஆட்சியில் ஏற்றுவதுதான் முக்கியம். கருணாஸ் நல்ல மனநிலையில் இருக்கிறேன். இப்போது விஜய்யை பற்றி பேசாதீர்கள். அவரே மனவேதனையில் மன உளைச்சலில் இருப்பார்” என்றார். இதேபோல கொங்கு இளைஞர் பேரவையுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் கட்சியின் தலைவர் தனியரசு அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக தெரிவித்தார்.
* ஐ.யூ.எம்.எல், மமக கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்-காதர் மொகிதீன் மற்றும் ஜவாஹிருல்லா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின்- இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் நேற்று தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசியதில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தமிழ்நாட்டில் 2 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்- மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் 2 சட்டமன்றத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொகிதீன் நிருபர்களிடம் கூறியாதவது: திமுக தலைமையில் அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்தே கூட்டணி வைத்து அரசியல் நடத்தி வரும் இயக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே. இன்று, நேற்றுல்ல நீண்ட காலமாகவே, அந்த பாரம்பரியத்திற்கு ஏற்ப சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை அழைத்து முதலில் கையெழுத்து வாங்குகின்ற வழக்கத்தை ெதாடர்ந்து பேணிவருகின்றனர். அந்த அடிப்படையில் எங்களை முதலில் அழைத்து கையெழுத்து போடச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தரை ஐயுஎம்எல் சார்பில் 16க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளை பெற்று நிற்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போது இல்லை. 5 அல்லது 4 தொகுதிகளை கேட்கலாம் என்று நினைத்தோம். அதன்பிறகு 3 தொகுதிகள் கேட்கலாம் என்று முடிவு செய்து பேச்சுவார்த்ைத குழுவினருடன் தொடர்ந்து பேசினோம். மேலும் கடந்த முறை கொடுத்த 3 தொகுதிகள் கேட்டோம், கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் எல்லா கட்சிகளிடம் இருந்து 1 தொகுதிகளை வாங்கி தான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதனால் 2 தொகுதியை பெற்று கொள்ளுங்கள் என்று கூறினர் அதை ஏற்றுக் கொண்டோம்.
அண்ணா காலத்தில் இருந்து திமுகவிற்கு ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயம் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் திராவிட மாடல் அரசுக்கு முழு ஆதரவையும் கொடுக்க முடிவு செய்து 2 தொகுதிகளை பெற்றுக்கொண்டு வந்துள்ளோம். அதே நேரத்தில் புதுச்சேரியில் நடக்க உள்ள தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்று கேட்டோம். கூடிய விரைவில் சாதகமான பதில்களை தருகிறோம் என்று உறுதியளித்துள்ளனர். எந்தெந்த தொகுதிகள் என்று கூறவில்லை. 16 தொகுதிகள் பட்டியல் கொடுத்துள்ளோம், அதில் 2 தொகுதிகள் ஒதுக்கப்படும். அகில இந்திய கட்சி என்பதால் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். இவ்வாறு காதர்மொகிதீன் கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது: மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய கோரிக்கைகளையெல்லாம் குறித்து கொண்டனர். அதுகுறித்து முதல்வர் திமுக தலைவரிடம் கருத்துகளை எடுத்துக் கூறுவதாக கூறியுள்ளனர். உதயசூரியன் சின்னத்தில் தான் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்றார்.
