சொன்னாரு: திமுகவின் 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.
செஞ்சாரு: தமிழகத்தின் 1,076 கி.மீ நீளமுள்ள கடற்கரை ஓரம் வசிக்கும் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் கடலையே சார்ந்துள்ளது. கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் ஆண்டுதோறும் விதிக்கப்படும் மீன்பிடித் தடைக்காலம், மீனவர்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை ஈடுகட்ட தமிழக அரசு வழங்கும் நிவாரணத் தொகையை உயர்த்துவது திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும். அதன்படி, ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் கடந்த 2023ம் ஆண்டு ஆக.18ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இது 2024-25ம் நிதியாண்டு முதல் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ரூ.5 ஆயிரமாக இருந்த நிதியுதவி தற்போது 60 சதவீதம் அதாவது ரூ.8 ஆயிரம் வரை அதிகரிக்கபட்டுள்ளது.
மேலும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், விரைவாகச் சென்றடையவும் தகுதியுள்ள மீனவர்களின் வங்கித் தொடக்கக் கணக்குகளில் நேரடிப் பணப்பரிமாற்ற முறை மூலம் நிதி செலுத்தப்படுகிறது. இந்த நிவாரணத் தொகை உயர்வுடன் சேர்த்து, மீனவர்களுக்கான மற்றுமொரு முக்கியத் திட்டமான “மீன்பிடி குறைந்த கால சிறப்புப் படி” தொகையும் ரூ.5,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மீனவ குடும்பத்திற்கு ஆண்டுக்கு கிடைக்கும் மொத்த அரசு உதவி கணிசமாக அதிகரித்துள்ளது. மீனவர்களின் நீண்ட கால கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மீனவ குடும்பங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளன.
* 1.98 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 14 கடலோர மாவட்டங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட மீனவக் குடும்பங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றனர். 1,98,923 குடும்பங்களுக்கு இந்த நிதி நேரடியாகச் சென்றடைகிறது.
* தடைக்காலத்தின் அவசியம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (கிழக்கு கடற்கரை) மற்றும் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை (மேற்கு கடற்கரை) விசைப்படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. மீன்களின் முட்டையிடும் காலமான இச்சமயத்தில் மீன்பிடிப்பதைத் தவிர்ப்பது வருங்காலத்தில் மீன் வளத்தைப் பெருக்க உதவும். இந்த 61 நாட்கள் வருமானம் இன்றி தவிக்கும் மீனவர்களுக்கு இந்த ரூ.8,000 பெரும் பக்கபலமாக உள்ளது.
* மீனவர் நலனுக்கான நிதி ஒதுக்கீடு விவரம்
2021-2022: ரூ.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது சுமார் 1.72 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்பட்டது.
2022-2023: நிவாரண தொகையை உயர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட நிலையில், சுமார் ரூ.100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2023-2024: இவ்வாண்டில் சிறப்புப் படியாக ரூ.1,000 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து (மொத்தம் ரூ.6,000), ரூ.108 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டது.
2024-2025: தேர்தல் வாக்குறுதிப்படி நிவாரணத் தொகை ரூ.8,000-ஆக உயர்த்தப்பட்டதால், நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்ந்து ரூ.140.07 கோடி ஆனது.
2025-2026: இந்த பட்ஜெட்டில் ரூ.145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2026-2027: இடைக்கால பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக மீனவர் நலத்துறைக்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.150 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* திமுக கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்த முடியாது: திருமாவளவன் உறுதி
தென்காசி மாவட்டம், சிவகிரியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச்சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்று அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் தேர்தல் தொடர்பான பேச்சு வார்த்தை மார்ச் 2ம் தேதி (நாளை) நடைபெறுகிறது. இதில் நான் மற்றும் பொதுச்செயலாளர்கள் பங்கேற்கிறோம். தென் மாவட்டங்களில் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம். கூடுதல் தொகுதி குறித்து பேசுவோம். ஊடகங்களில் பரப்பப்படுவது போல் திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்த விரும்புபவர்கள் வதந்திகளை பரப்புகிறார்கள். திமுக கூட்டணி தொடர்ந்து ஒற்றுமையாக இயங்கி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜவில் ஐக்கியமாகாமல் திமுகவிற்கு வந்திருப்பது அவர் மீது உள்ள நன்மதிப்பை மேலும் உயர்த்துவதாக இருக்கிறது. அவர் செங்கோட்டையனை போல் தவெகவில் கூட போய் சேர்ந்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் முடிவு எடுக்கவில்லை. இன்னொரு திராவிட இயக்கமான திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பெரியளவில் கொள்கை வேறுபாடு கிடையாது. அரசியல் முரண்பாடு தான் உண்டு. ஓ.பன்னீர்செல்வத்தால் திமுக கூட்டணி மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன். குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த கூட்டணி மேலும் வலுப்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
