×

விமானம் திடீர் விபத்துக்குள்ளானால் போர்க்கால அடிப்படையில் பயணிகளை மீட்பது எப்படி? வண்டலூர் அருகே ஒத்திகையால் பரபரப்பு

சென்னை: வானில் பறந்து கொண்டிருக்கும் விமானம் திடீரென விபத்துக்குள்ளானால் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு விமான பயணிகள், ஊழியர்கள், விமானம் ஆகியவற்றை பத்திரமாக பாதுகாத்து, மீட்பது குறித்த ஒத்திகையை இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தியது. இந்திய விமான நிலைய ஆணையம், இந்தியா முழுவதும் உள்ள நிலப்பரப்பு மற்றும் வங்காள விரிகுடா, அரபிக் கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் அமைந்துள்ள கடல், வனப்பகுதி, தரைப்பகுதி வான்வெளி முழுவதிலும் விமான போக்குவரத்து சேவைகளை முழுமையாக கண்காணித்து, பாதுகாப்பாக விமான சேவைகள் இயங்குவதற்கு ஏடிஎஸ் எனப்படும் ஏர் டிராபிக் சர்வீசஸ் பொறுப்பை ஏற்றுள்ளது.

2026ம் ஆண்டு, சென்னை விமான நிலைய மீட்பு ஒருங்கிணைப்பு மையம், ஒத்திகை நிகழ்ச்சி ஒன்றை நேற்று வண்டலூர் அருகே நடத்தியது. சென்னை விமான நிலையத்தின் எல்லையை தாண்டிய பகுதியில் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 150 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானம், திடீரென விபத்துக்குள்ளானதாகவும், அப்போது உடனடியாக அவசரகால, போர்க்கால அடிப்படையில் விமான விபத்துகளில் இருந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்கும் காட்சிகள் தத்துரூபமாக, ஒத்திகையாக செய்து பார்க்கப்பட்டது.

அப்போது சென்னை விமான நிலைய அவசரகால மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், அதிரடிப்படையினர், மருத்துவக் குழுவினர், போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு மீட்பது போன்ற இந்நிகழ்ச்சி நடந்தது. இந்த பாதுகாப்பு சோதனை ஒத்திகை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய இயக்குனர் மற்றும் தென் மண்டல நிர்வாக இயக்குனர் ராஜா கிஷோர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி, இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் விபின் குமார், இந்திய விமான நிலைய ஆணைய உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் வழிகாட்டுதலுடன் நடந்ததாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Tags : Vandalur ,Chennai ,Airports Authority of India ,Airports Authority of India, ,India… ,
× RELATED வெங்காய லோடு பிடித்த பறக்கும் படை;...