×

டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலையில் 15வது பட்டமளிப்பு விழா காலதாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்: தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பேச்சு

சென்னை: காலதாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா கூறினார். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா கலந்து கொண்டார். பின்னர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: நீதித்துறையும், வழக்கறிஞர் துறையும் ஒரு நீதியின் தேருக்கு இரு சக்கரங்கள் போன்றவை. இந்த இரண்டுக்கும் இடையே நல்லிணக்கம் இருந்தால் மட்டுமே விரைவான மற்றும் நியாயமான நீதி கிடைக்கும். காலதாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பதால் வழக்குகளை தாமதமின்றி முடிக்க வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும். இளம் வழக்கறிஞர்கள் அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சட்டம் மாறிக்கொண்டே இருப்பதால், புதிய சட்டத் திருத்தங்களை தொடர்ந்து படித்து உங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வசதியற்ற எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.

பேனா கத்தியை விட வலிமையானது உங்கள் சொல்லும் செயலும். ஒரு தேசத்தையே உருவாக்கவோ அல்லது மாற்றவோ கூடிய வல்லமை கொண்டது. டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களை மனதில் கொண்டு, சமூக மாற்றத்தின் தூதுவர்களாக இளம் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும். தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் இதனை எல்லாம் வழக்கறிஞர்களான நீங்கள் சமூக அக்கறை கொண்டு தடுத்து சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும். தற்போது நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேங்கி உள்ளது. இதனை உங்களைப் போன்ற வழக்கறிஞர்கள் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்து அதனை தீர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும். புதிய சிறந்த ஆற்றலை உங்களிடம் உருவாக்கிக் கொண்டு சிறந்த பண்பாளராக நீங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழக ஆளுநரும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று பிஎச்டி பட்டம் மற்றும் கோல்டு மெடலுடன் யூஜி, பிஜி பட்டம் பெற்ற 80 பேருக்கு பட்ட சான்றிதழ் வழங்கினார். மொத்தம் 16,571 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரதிதாசன், சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் மற்றும் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Justice ,M.M. Srivastava ,15th convocation ,Dr. Ambedkar Law University ,Chennai ,Madras High Court ,convocation ,Tamil Nadu ,Taramani, Chennai ,Kalaiyarang ,
× RELATED சமையல் காஸ் தட்டுப்பாடு தீவிரமாகிறது;...