அசாம் தேர்தல் களம் அனல் பறக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான ஓட்டுகளை குறிவைத்து பாஜ தனிக்கணக்கு போட்டு வருகிறது. போடோலாந்து பகுதியில் பிரபலமான ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் கட்சியை அந்த பகுதியில் தனியாக 21 இடங்களில் போட்டியிட வைக்க பாஜ திட்டமிட்டுள்ளது. இதுபற்றி ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.என்.சின்ஹா கூறுகையில், ‘யுபிபிஎல் கட்சி வேறு எந்த அரசியல் சக்தியின் துணை அல்லது பினாமி கட்சி அல்ல.
வரவிருக்கும் தேர்தல்களில் போடோலாந்து பிராந்தியத்தில் உள்ள 15 சட்டமன்ற இடங்களில் 14 இடங்களை எங்கள் கட்சி கைப்பற்றும். அசாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் அட்டூழியங்களை எதிர்கொள்கின்றனர். முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கு யுபிபிஎல் கட்சி பொறுப்பேற்கும். பா.ஜ கூட்டணியில் அசாம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சிகளை விட எங்கள் கட்சி பெரியது.
எங்கள் கட்சி சூதாட்டம் மற்றும் மது அருந்துவதை உறுதியாக எதிர்க்கிறது. எந்தவொரு கட்சி உறுப்பினரும் மது அருந்துவது அல்லது சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்’ என்றார். அசாம் மாநிலத்தில் உள்ள முஸ்லீம் ஓட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைப்பதை தடுக்க யுபிபிஎல் கட்சியை தனியாக நிறுத்த பா.ஜ திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.
