×

ஊட்டி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை அமைச்சர் திறந்து வைத்தார்

ஊட்டி,பிப்.9: ஊட்டி மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 81 கடைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி மார்க்கெட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் போது 81 கடைகள் எரிந்து நாசமாயின. இந்த கடைகளை சீரமைக்க ஊட்டி எம்எல்ஏ., கணேஷ் தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். மொத்தம் 49.95 லட்சம் மதிப்பில் அதே இடத்தில் தற்போது புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. நேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி புதிதாக கட்டப்பட்ட கடைகளை திறந்து வைத்தார். மேலும், இந்த கடைகளுக்கு கதவுகள் போடுவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்று  வாரியம் சார்பில் 172 வீடுகள் ரூ.18.68 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. இதில் முதற்கட்டமாக  92 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் வேலுமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: அதே போல் பந்தலூர் சேரங்கோடு  பகுதியில் 152 வீடுகள் ரூ.13.26 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. மேலும், நடுஹட்டி பகுதியில் 2 பணிகளும், அல்லஞ்சி, அண்ணாநகர், கீழ்குந்தா  மற்றும் நெல்லியாளம் ஆகிய பகுதிகளில் 743 வீடுகள் ரூ.74.42 கோடி மதிப்பில்  கட்டுவதற்கான பணிகள் துவக்கப்படவுள்ளது, என்றார். நிகழ்ச்சியின் போது, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கமிஷ்னர் சரஸ்வதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத், முன்னாள் எம்பி., அர்சுணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,shops ,Ooty Market ,
× RELATED தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்...