×

சாயக்கழிவு நீரை வாய்க்காலில் வெளியேற்றிய ஆலை அதிபர்கள் மீது குற்ற வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்

ஈரோடு, பிப். 9: சாயக்கழிவு நீரை பாசன வாய்க்காலில் வெளியேற்றிய ஆலை அதிபர்கள் மீது குற்ற வழக்கு பதிந்து, கைது செய்யக்கோரி காலிங்கராயன் பாசன சபை விவசாயிகள் ஈரோடு எஸ்பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாசன சபையின் தலைவர் வேலாயுதம் தலைமையில் நேற்று விவசாயிகள் ஈரோடு எஸ்பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: காலிங்கராயன் வாய்க்கால் வெண்டிபாளையம் பகுதியில் கடந்த 7ம் தேதி மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

அப்போது தாமரைச்செல்வன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இயங்கும் 35 சாயப்பட்டறைகளில் பி.வி.சி. குழாய்கள் மூலமாக நேரடியாக காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நீர் கலந்ததை கண்டறிந்தார். இதையடுத்து கலெக்டர் கதிரவன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வாய்க்காலில் சாயக்கழிவு நீர் கலப்பதை உறுதி செய்து, சம்மந்தப்பட்ட ஆலைகளுக்கு சீல் வைத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாயக்கழிவு நீரால் காலிங்கராயன் பாசன பகுதி விவசாயிகள் மற்றும் அதனை குடிநீராக பயன்படுத்தும் மக்களுக்கு நோய் பாதிப்பு, விவசாய விளைச்சல் பாதிப்புகளை பல முறை அரசிடம் முறையிட்டும், தொடர்ந்து இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாய ஆலை அதிபர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் மீது குடிநீரில் கொடிய விஷத்தன்மை கொண்ட சாய நீரை கலந்த குற்றத்திற்கான சட்ட பிரிவில் வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

Tags : plant owners ,
× RELATED குமரி மாவட்டத்தில் ஒரு கி.மீட்டரில்...