×

72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை தகைசால் தமிழருக்கு வீர வணக்கம், வாழ்நாள் போராளிக்கு செவ்வணக்கம் என முழக்கமிட்ட முதல்வர்: ஆர்.நல்லகண்ணுவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவ கல்விக்காக ஒப்படைப்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான ஆர்.நல்லகண்ணு (101) உடல்நலக் குறைவால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது. நல்லகண்ணுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் தகைசால் தமிழருக்கு வீர வணக்கம், வாழ்நாள் போராளிக்கு செவ்வணக்கம் என முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினார்.

1925 டிசம்பர் 26 அன்று, வைகுண்டத்தில் பிறந்த ஆர்.நல்லகண்ணு 18 வயதிலேயே ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று தீவிர விடுதலைப் போரில் ஈடுபட்டார். தொடர்ந்து, இடதுசாரிச் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட நல்லகண்ணு தன்னை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டு, தனது வாழ்வின் பெரும்பகுதியை ஒடுக்கப்பட்டவர்கள், ஏழை விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், தாமிரபரணி மணல் கொள்ளைக்கு எதிராகவும் இறுதிமூச்சு வரை களத்தில் நின்ற பாட்டாளி வர்க்கப் போராளியாய்த் திகழ்ந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நல்லகண்ணு வீடு திரும்பினார். இந்நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரமாக சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். எளிமையின் அடையாளமாய்த் திகழ்ந்த நல்லகண்ணுவின் மறைவு, தமிழக அரசியல் களத்தை மட்டுமன்றி, ஒட்டுமொத்த மக்கள் இதயங்களையும் ஆழமான சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிகாக தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் முதலே அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துனார். உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்த்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லகண்ணுவின் தியாகத்தைப் போற்றும் வகையில் முழு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். நேற்றும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தகைசால் தமிழருக்கு வீர வணக்கம், வாழ்நாள் போராளிக்கு செவ்வணக்கம்’ என முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினார். நல்லகண்ணுவின் உடலுக்கு கட்சி அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

நல்லகண்ணுவின் உடலுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா, மாநிலச் செயலாலளர் மு.வீரபாண்டியன், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கேரள மாநில முன்னாள் சபாநாயகர் விஜயகுமார், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரைவைகோ எம்பி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தவாக தலைவர் வேல்முருகன், மேயர் பிரியா, பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய், சீமான், ஜவாஹிருல்லா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை விஐடி துணை தலைவர் ஜி.செல்வம் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

திரைக்கலைஞர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், பார்த்திபன், மன்சூர் அலி கான் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அதேபோல், இடதுசாரிச் சிந்தனையாளர்கள், தொழிற்சங்கவாதிகள், விவாசாயிகள் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர், பத்திரிகையாளர் மன்றம் மற்றும் பொதுமக்கள் எனத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கானவர்கள் நல்லகண்ணுவின் உடலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நேற்று மாலை 3 மணிக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, செந்தொண்டர் அணிவகுப்புடன் செவ்வணக்கம் என்ற முழக்கம் முழங்க தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இருந்து பேரணியாக எடுத்துச் செல்லப்பட்ட நல்லகண்ணுவின் உடல், அவரது விருப்பப்படி மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. அவரது உடலை சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவ மாணவிகள் மலர்வளையம் வைத்து பெற்றுக்கொண்டனர். இவ்வளவு ஆண்டுகாலம் மக்களுக்காகப் போராடிய நல்லகண்ணுவின் உடல், இனி மருத்துவ மாணவர்களின் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் பயன்படப்போகிறது.

Tags : Chief Minister ,Tamils ,R. Nallakannu ,Chennai ,Communist Party of India ,Rajiv Gandhi Government Hospital ,
× RELATED சென்னை நகர் இசை நகரமாக யுனெஸ்கோவால்...