திருவிடைமருதூர்: அரசு கல்லூரி, பாலிடெக்னிக்குகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 38 புதிய அரசு கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால் 18,760 மாணவர்கள் கூடுதலாக பயனடைந்துள்ளனர்.
250க்கும் மேற்பட்ட புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டுக்கு பிறகு உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் 4,000 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் மேல் நடவடிக்கை தொடரப்படாத நிலையில் 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டு, தற்போது 5 பாடப்பிரிவுகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன், 2016ல் இருந்து உயர்த்தப்படாமல் இருந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் 2022ல் ரூ.15,000ல் இருந்து ரூ.20,000ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. மீண்டும் 2 ஆண்டுகளிலேயே (2024-ல்) ரூ.25,000ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.25,000ல் இருந்து ரூ.30,000ஆக உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி கவுரவ விரிவுரையாளர்கள் 1.03.2026 முதல் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம். அதேபோல் அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ரூ.20,000ல் இருந்து ரூ.25,000 ஆக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.53 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 8,741 பேர், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் 319 பேர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் 586 பேர் என மொத்தம் 9,646 தற்காலிக ஆசிரியர்கள் பயனடைவர்.
அண்ணா பல்கலைக்கழக தற்காலிக உதவி பேராசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வரால் 2025-26ம் கல்வியாண்டில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் துவங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ‘‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவிடைமருதூர்’’ என பெயர் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
