×

20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள அரசமலை பகுதியில் தேசிய வங்கி தொடங்க வேண்டும்

பொன்னமராவதி, பிப். 26: பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் தேசிய வங்கி துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் அதிக கிராமங்கள் மற்றும் அதிக மக்கள் தொகை உள்ள ஊராட்சிகளில் ஒன்று அரசமலை ஊராட்சி. இந்த ஊராட்சியில் அரசமலை, வையாபுதி, கண்டெடுத்தான் பட்டி, மதியாணி, சாத்தனூர், மொங்காம்பட்டி, பூவலாக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதி உள்ளது. இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன.

இங்கு வசிக்கும் பொதுமக்கள் சேமிப்பு, முதியோர், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள், கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சேவைக்கு பொன்னமராவதி பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. வங்கி சேவைக்காக பொன்னமராவதி செல்வதற்கு இருசக்கர வாகனம், பேருந்தில் செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக வங்கி சேவைக்கு என வீட்டை விட்டு புறப்பட்டால் பல மணிநேரம் வீணாகிறது. எனவே 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசமலையில் தேசிய வங்கி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Arasamalai ,Ponnamaravathi ,Arasamalai Panchayat ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...