×

புஸ்ஸி ஆனந்துக்கிட்ட புகாரா கொடுக்குற… தேர்தல் முடியட்டும் தலை, மூளை, காலை வெட்டி ரோட்டில் வீசுறேன்: தவெக நிர்வாகிகளை மிரட்டிய நாகை மாவட்ட செயலாளர்

தவெக தலைவர் விஜய், கடந்த 2025 செப்டம்பர் மாதம் பிரசாரத்திற்காக நாகப்பட்டினம் வருகை தந்தார். விஜய் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான வரவு, செலவு கணக்குகளை நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாரன், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளிடம் காட்டவில்லை. இதனால் திருமருகல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், கட்சி நிர்வாகிகள் சிலருடன் சேர்ந்து மாவட்ட செயலாளர் சுகுமாரனிடம் வரவு செலவு கணக்குகளை கேட்டார். ஆனால் சுகுமாரன் வரவு செலவு கணக்குகளை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதுதொடர்பாக நாகேந்திரன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் இரண்டு பேரையும் நேரில் வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதையடுத்து தவெக நிர்வாகிகள், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாரை நேரில் சந்திக்க கடந்த மாதம் 26ம்தேதி நாகப்பட்டினத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது சுகுமாரன், ‘‘நான் பார்த்து உங்கள் எல்லோருக்கு பதவி போட்டு கொடுத்தேன்.

ஆனால் நீங்கள் எல்லாம் பொதுச்செயலாளரிடம் புகார் செய்கிறீர்கள். இனி இதேபோல் புகார் அளித்தால் உங்களை கொலை செய்து தலையை வெட்டி, மூளையை ரோட்டில் வீசுவேன். எனக்கு வேண்டியவர்களுடன் ஊருக்குள் நுழைந்து உங்கள் கால்களை வெட்டி கொலை செய்வேன். சட்டமன்ற தேர்தல் முடிந்து கட்சி நிர்வாகி அலெக்சின் கால்களை வெட்டுவேன்’’ என கூறிய சுகுமாரன், நிர்வாகிகளை கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் அவர்களை சரமாரி தாக்கி ரகளையில் ஈடுபட்டு ஆபாசமான வார்த்தைகளாலும் பேசியுள்ளார்.

இதே போல் மாவட்ட செயலாளர் சுகுமாரின் மகன் ரொனால்டோ, ‘‘எனது தந்தைக்கு ஒன்று என்றால் சும்மா இருக்க மாட்டேன். அனைவரையும் கொலை செய்து கல்லை கட்டி கடலில் இறக்கி விடுவேன்’’ என மிரட்டியுள்ளார். தந்தையும், மகனும் மிரட்டல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திருமருகல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார், மாவட்ட செயலாளர் சுகுமாரன், அவரது மகன் ரொனால்டோ ஆகியோர் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Anandukita ,Nagai District ,TAVEGA ,Vijay ,Nagapattinam ,District ,Sukumaran ,Thirumarugal East Union ,Secretary… ,
× RELATED வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? –...