×

சிறு தொழிலாளர்களுக்கு எம்எஸ்எம்இ `கிரெடிட் கார்டு’: ஒன்றிய அமைச்சர் தகவல்

கோவை: சிறு தொழிலாளர்களுக்கு எம்எஸ்எம்இ `கிரெடிட் கார்டு’ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி கூறினார். கோவை விமான நிலையத்தில் நேற்று ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) பங்களிப்பு 33.31 சதவீதமாக உள்ளது. நாட்டின் உற்பத்தித் துறையில் 36 சதவீத பங்கையும், மொத்த ஏற்றுமதியில் 46 சதவீத பங்கையும் இத்துறை வழங்கி வருகிறது.

ஒரு நாட்டின் வலிமை அதன் ஏற்றுமதி அளவை வைத்தே கணக்கிடப்படும் நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான முதுகெலும்பாக எம்எஸ்எம்இக்கள் உள்ளன. அலுமினியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானதுதான். விரைவில் நிலைமை சீராகி பழைய விலை நிலவரம் திரும்பும். ஜாப் ஒர்க் செய்யும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போல சிறு தொழிலாளர்களுக்கும் எம்எஸ்எம்இ கிரெடிட் கார்டு’ வழங்குவது குறித்த அறிவிப்பு, அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்படும். மூலப்பொருள் விலையைக் கண்காணிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து கோவையில் உள்ள கள நிலவரங்களை அதிகாரிகளுடன் ஆலோசித்து, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கோவை தயாரிப்புகள் சர்வதேசச் சந்தையில் வலுவாகச் சென்றடையத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு தொடர்ந்து வழங்கும். கயிறு வாரியம் போன்ற அமைப்புகள் மூலம் நலிவடைந்த பிரிவினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தமிழ்நாடு, பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குறுந்தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union Minister ,Coimbatore ,Jitan Ram Manji ,
× RELATED ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி...