×

புத்துயிர் பெற்ற விக்டோரியா பொது அரங்கம்!

நன்றி குங்குமம் தோழி

பூங்கா, அருங்காட்சியகம், கண்காட்சி, உலா பேருந்துகள் போன்றவற்றால் புதுப்பொலிவு பெற்று வருகிறது சிங்கார சென்னை. தற்போது மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட வரும் இடமாக விக்டோரியா பொது அரங்கம் திகழ்கிறது. 137 வருட பழமை வாய்ந்த இக்கட்டிடம் புத்துயிர் பெற்று புது அருங்காட்சியகமாக காட்சியளிக்கிறது.

அறிமுகம் மற்றும் கட்டிடக்கலை…

இந்தோ-சாரசனிக் பாணியில்(Indo-Saracenic style) சிவப்பு நிறத்தில் கட்டப்பட்டுள்ள விக்டோரியா பப்ளிக் ஹால் கட்டிடம் வெள்ளை நிற ரிப்பன் மாளிகைக்கும், புறநகர் ரயில் நிலையத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இந்த அழகான கட்டிடத்தின் வரலாறு சுவாரஸ்யமானது. சென்னையில் மக்களுக்கு ஒரு பொது அரங்கம் தேவைப்பட்டது. 1882ல் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பொது அரங்கம் கட்டுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

விஜயநகர அரசர் பூசப்பாட்டி ஆனந்த கஜபதிராஜு, திருவிதாங்கூர் மகாராஜா, எட்டயபுரம் மற்றும் ராமநாதபுரம் ஜமீன்தார்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி சர் டி.முத்துசுவாமி ஐயர் போன்றோர் நிதி வழங்கினர். சுமார் 16,000 ரூபாய் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி மூர் மார்க்கெட் அருகே 3 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. பிரபல கட்டிடக் கலைஞராக திகழ்ந்த Robert Fellowes Chisholm என்பவரால் வடிவமைக்கப்பட்டு சென்னையை சேர்ந்த கட்டட ஒப்பந்தக்காரரும் பொறியாளருமான நம்பெருமாள் செட்டி என்பவரால் கட்டப்பட்டது. 1886ல் பணிகள் முடிவடைந்து, 1887ல் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவை ஒட்டி இதற்கு ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என்று பெயரிடப்பட்டது.

முக்கிய வரலாற்று நிகழ்வுகள்…

* மக்களுக்கான இந்த பொது அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.1897ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர், சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு சென்னை வந்தபோது விக்டோரியா பொது அரங்கிற்கு வருகை தந்தார். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் அரங்கின் வராண்டாவில் நின்றே மக்களிடம் உரையாற்றினார்.

* 1915ல் மகாத்மா காந்தி முதன்முதலாகச் சென்னை வந்தபோது இங்கு உரையாற்றினார்.

* திராவிட இயக்கத்தின் பிறப்பிடமாக விக்டோரியா பொது அரங்கம் கருதப்படுகிறது. 1916ல் நீதிக்கட்சி உருவானதும் இங்குதான்.

* 1943ல் எம்.ஜி.ஆர் – அண்ணா சந்திப்பின் போது அறிஞர் அண்ணாவின் ‘சந்திரோதயம்’ நாடகம் இங்கு நடந்தபோது, டி.வி.நாராயணசாமி மூலமாக எம்.ஜி.ஆர் முதன்முதலாக அறிஞர் அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

* பம்மல் சம்பந்த முதலியார் ‘சுகுண விலாச சபா’வை இங்கு 1891ல் தொடங்கினார். இது ஒரு சமூக கிளப்பாகவும் செயல்பட்டது. பெண் கதாபாத்திரங்களுக்கும் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தனர்.

* சென்னையின் முதல் சினிமா காட்சியை டி.ஸ்டீபன்சன் என்பவர் இங்கு 1896ல் திரையிட்டார். ரயில் நிலையத்திற்குள் ரயில் வருவது, கடலில் கப்பல் செல்வது போன்ற 10 சிறிய படத்துண்டுகள் காண்பிக்கப்பட்டன.

* விக்டோரியா பொது அரங்கம் இந்தியாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டின் பிறப்பிடமாகக் கருதப்பட்டது. மேலும், செஸ் ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் மற்றும் டென்னிஸ் போட்டிகளுக்கும் இது புகழ்பெற்ற இடமாக இருந்தது.

வீழ்ச்சியும் மறுசீரமைப்பும்…

1950-களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்களின் வரவால், ரயில் இரைச்சல் காரணமாகவும் விக்டோரியா பொது அரங்கின் புகழ் மங்கத் தொடங்கியது. 1967ல் இக்கட்டிடத்தை இடித்துவிட்டு இங்கு சினிமா தியேட்டர் கட்ட முடிவு செய்தபோது, அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா அதைத் தடுத்து நிறுத்தினார். பல ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் இருந்த இக்கட்டிடம், பின்னர் பல்வேறு முயற்சிகளால் மீட்கப்பட்டது.

1996ல் சென்னையின் மேயராக மு.க.ஸ்டாலின் இருந்த போது, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டது. 2010ல் பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அந்தப் பகுதியை சுற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்கள் அகற்றப்பட்டன. மெட்ரோ ரயில் பணிகளால் விக்டோரியா பொது அரங்கை புதுப்பிக்க சில தாமதம் ஏற்பட்டாலும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 2023ம் ஆண்டு இக்கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முழுமையாக புதுப்பிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டு 2025ம் ஆண்டின் இறுதியில் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

செய்தி:ஆர்.ஆர்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

Tags : Victoria Public Stadium ,Singara Chennai ,
× RELATED அன்று பள்ளி மாணவர்கள்… இன்று சமூக ஆர்வலர்கள்!