×

பட்டுக்கூட்டில் பளபளக்கும் திருமண மாலைகள்!

நன்றி குங்குமம் தோழி

பட்டு என்றாலே பாரம்பரியத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆடை கலாச்சார சொத்தே காஞ்சி பட்டுதானே! பெண்களின் அழகை கூட்டிக் காட்டும் பட்டுச்சேலைகள்தான் என்றைக்குமே முதன்மையாக இருக்கின்றது. மல்பெரி இலைகளை உண்ணும் பட்டுப்புழுக்களை வளர்த்து, அதன் கூட்டிலிருந்து நூல் எடுக்கப்பட்டு, சாயம் ஏற்றி, பட்டாடைகளாக உருமாறுகின்றன. அதன் பளபளப்பு, நீடித்த தன்மை, நேர்த்திக் காகத்தான் அதனை பலரும் விரும்புகிறார்கள்.

‘‘பட்டு ஆடைகளை உடுத்தும் போது மனதும் சந்தோஷமாகும். அதே போல் பட்டுப்புழுக்கூட்டில் செய்யப்படும் திருமண மாலைகளும் பாசிட்டிவ் வைப்ரேஷன் தரும்’’ என்கிறார் ‘சில்க் பெட்டல்ஸ் &டெக்கர்ஸ்’ உரிமையாளர் மரகதமணி. பயன்படாமல் தூக்கி எறியப்படும் பட்டுக் கூட்டில் திருமண மாலைகள், கிளிப்ஸ், சிகை அலங்கார பூக்கள், கம்மல், செயின் போன்ற அணிகலன்கள், பொக்கேக்கள், ஃப்ளவர் ேவஸ்கள் செய்து விற்பனையில் கலக்குகிறார்.

‘‘நாங்க ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம். விவசாயம்தான் எங்களின் தொழில். மேலும், ‘பிரைட் எமிசன் டெஸ்டிங் சென்டர்’ என்ற பெயரில் வாகனப் புகையை பரிசோதிக்கும் நிலையம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறோம். என் கணவருக்கு உதவியாக இருந்து வருகிறேன். இதனுடன், அரை ஏக்கர் பரப்பளவில் இரண்டு தலைமுறையாக பட்டுப்புழுக்களை வளர்த்து அதனை கோவை, ஓசூர் போன்ற ஊர்களுக்கு அனுப்பிவிடுவோம்.

அந்த சமயத்தில் ஈரோடு செரிகல்ச்சர் துறையின் சயின்டிஸ்ட் சாரதா எங்களை அணுகினார். அவர் பட்டுப்புழுக்கூட்டில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் குறித்து இலவச பயிற்சி இருப்பதாகவும், அதற்கான பயிற்சி அளிப்பதாக கூறினார். மேட்டுப்பாளையம் செரிகல்ச்சர் துறையினை சார்ந்தவர்கள் இது குறித்து ஐந்து நாட்கள் வகுப்பினை எடுத்தார்கள். விருப்பமே இல்லாமல்தான் பயிற்சிக்கு சென்றேன்’’ என்றவர், பட்டுப்புழுக்கூடுகள் எவ்வாறு மாலைகளுக்கு பூக்களாக தயாராகிறது என்பது குறித்து விவரித்தார்.

‘‘நாங்க பயிற்சிக்கு போன இடத்தில் வீணாகும் பட்டுப்புழுக்கூட்டை டிசைனாக கத்தரித்து, சாயம் ஏற்றி பூக்களாக செய்வது குறித்து சொல்லித் தந்தாங்க. நானும் என் உறவினர்கள் நான்கு பேரும்தான் அந்தப் பயிற்சிக்கு சென்றோம். பொழுதுபோக்கிற்காக சென்றதுதான் இன்று எங்களின் தொழிலாக மாறிவிட்டது. பட்டுப்புழு மிருதுவாக இருந்தாலும், அதன் கூடு அழுத்தமாக இருக்கும். ஆனால், எடை இருக்காது. கத்தி அல்லது கத்திரியால் மட்டுமே கத்தரிக்க முடியும்.

Zig Zag, த்ரி லேயர், ஸ்ட்ரெயிட், வட்டம் என நான்கு டிசைன்களில் எவ்வாறு கத்தரிக்கலாம் என்று சொல்லிக் கொடுத்தார்கள். மேலும், அதைக் கொண்டு பொக்கே, ஃபிளவர் வாஸ் செய்யவும் பயிற்சி அளித்தார்கள். அதன் பிறகு நாங்க எங்க கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி பல டிசைன்களில் பூக்களை செய்ய ஆரம்பித்தோம். ரோஸ் மாலை, லோட்டஸ் மாலை எல்லாம் தயாரிக்கிறோம். பட்டுப்புழுக்கூட்டில் செய்த பூக்களால் ஆன மாலைகள் வாடாது, நிறமும் மங்காது, பட்டுப் போல் பளபளப்பாக இருக்கும்’’ என்றார்.

‘‘பட்டுப்புழுக் கூடுகளை ஒரு நாளைக்கு 300க்கு மேல் கத்தரிக்க முடியாது. முதுகு வலி ஏற்படும். கூலிக்கு ஆட்கள் வந்தாலும் 350 கூடுகள்தான் அதிகபட்சம். முதலில் விரும்பும் டிசைனில் கத்தரித்து தேவைப்படும் சாயத்தில் தோய்த்து காய வைப்போம். அதன் பிறகு பூக்களாக கோர்ப்போம். டபுள் லேயர் பூக்கள் என்றால் இரண்டு கூட்டினை ஒட்ட வேண்டும். இதில் மணிகளையும் கோர்க்கலாம். நான்கு பேர் சேர்ந்து ஒரு மாலையை இரண்டு நாட்களில் முடிக்கலாம்.

மாலை மட்டுமில்லாமல், ஃபிளவர்வேஸ், திருமண ஜோடி மாலைகள், பொக்கேக்கள், பியூட்டி பார்லர்களில் பயன்படுத்தப்படும் ஹேர் அசெசரிஸ் என அனைத்தும் செய்கிறோம். தற்போது இதில் திருமண மாலைகளை செய்து தரச் சொல்லி பலர் கேட்கிறார்கள். காரணம், பூக்களால் செய்யப்படும் மாலைகள் வாடி விடும். சிலர் தங்களின் திருமண மாலைகளை நினைவுகளாக பாதுகாப்பாக வைக்க விரும்புகிறார்கள். அதனை ரெசின் ஆர்ட் மூலம் பாதுகாக்கிறார்கள். ஆனால், பட்டுப்புழுக்கூட்டு மாலைக்கு அதெல்லாம் தேவையில்லை. அது அப்படியே இருந்தாலும் தன் பளபளப்பு மாறாமல் இருக்கும். நாங்க இந்த மாலைகளை விரும்பும் வண்ணங்களில் டிசைன்களில் செய்து தருகிறோம்.

கல்யாணம் மட்டுமில்லாமல் கோயில்களுக்கும் கொடுக்கிறோம். சாதாரணமாக தண்ணீரில் அலசினாலே போதும்’’ என்றவர், குழந்தைகளுக்கான கம்மல், செயின் போன்ற ஆபரணங்களையும் செய்து விற்பனைக்கு வைத்துள்ளார்.‘‘பட்டுப்புழுக்கள் ஏற்றுமதி போக வீணான கூடுகளை பயன்படுத்துகிறோம். மேலும், மற்ற ஊர்களிலிருந்தும் கூடுகளை வாங்குகிறோம். பட்டுப்புழுவை சுத்தம் செய்து கூடுகளை எடுப்பது பெரிய வேலை என்பதால், நாங்க கூடுகளை மட் டும் வெளியே இருந்து தான் வாங்குகிறோம். விலை சற்று அதிகம், கால் கிலோவில் 300 கூடுகள் வரை நிற்கும். அதிலும் சில தரமில்லாத எரிந்து போன கூடுகள் இருக்கும்.

தரமில்லாத சாயங்களை பயன்படுத்தினால் ஒட்டாது என்பதால், சாயங்களை மட்டும் ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து வாங்குகிறோம். பட்டுக்கூடுகளை பிரிப்பது எவ்வாறு பெரிய வேலையோ அதே போல்தான் அதிலிருந்து மாலைகளை தயாரிப்பதும். அதனால் நாங்க ஒவ்வொருவரும் ஒரு வேலையை செய்து அதன் பிறகு ஒரு முழுமையான பொருளாக மாற்றுகிறோம்.

அதாவது, ஒருவர் கூட்டினை கத்தரிப்பார். ஒருவர் சாயம் ஏற்றுவார். ஒருவர் கோர்ப்பார். அதன் பிறகு அனைவரும் ஒன்றாக கூடி மாலையாகவோ அல்லது ஃபிளவர்வேஸ் என முழு உருவம் கொடுப்போம். வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டே இதை செய்வதால் மன நிறைவும் ஏற்படுகிறது, சம்பாதிக்கவும் முடிகிறது’’ என்கிறார் மரகதமணி. ‘‘தற்போது எங்கள் பகுதிகளில் ஸ்டால்கள் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறேன். பலரும் வியப்புடன் வாங்கிச் செல்கிறார்கள். செரிகல்ச்சர் துறையில் நடைபெறும் விழாவிலும் நாங்க ஸ்டால்கள் அமைக்க வாய்ப்பு தருகிறார்கள். பரிசளிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு.

தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் இதனை தெரிந்து கொண்டு ஆர்டர் செய்கிறார்கள். எதிர்காலத்தில் கடை திறக்க வேண்டும். இன்னும் நிறைய பேருக்கு கற்றுத்தர வேண்டும். இந்த மாலைகள் பட்டுத் துணியை போலவே உயர்வானது. பட்டு ஆடையின் மகத்துவம் அறிந்தவர்களுக்கு எங்கள் உழைப்பும் பெருமையும் தெரியும்’’ என்கிறார் மரகதமணி.

தொகுப்பு: கலைச்செல்வி

Tags : Kanji Patudana ,Tamil Nadu ,
× RELATED அன்று பள்ளி மாணவர்கள்… இன்று சமூக ஆர்வலர்கள்!